சங்கமித்ரா' படக்குழுவினருடன் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொள்ள ஏ.ஆர்.ரஹ்மான் சம்மதம் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸில் கேன்ஸ் திரைப்பட விழா கோலாகலமாக தொடங்கப்படவுள்ளது. இவ்விழாவிற்கு அனுசரணையாளர்களில் ஒருவராக தேனாண்டாள் பிலிம்ஸ் இடம்பெறவுள்ளது.
இதில் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ள 'சங்கமித்ரா' படம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இதன் அறிமுக விழாவில் இயக்குநர் சுந்தர்.சி, ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன், கலை இயக்குநர் சாபுசிரில் ஆகிய படக்குழுவினருடன் தயாரிப்பாளர் முரளி ராமசாமியும் பங்கேற்கவுள்ளார்.
'சங்கமித்ரா'வுக்கு இசையமைக்கவுள்ள ஏ.ஆர்.ரஹ்மானும் கலந்து கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும் என கருதி பேச்சுவார்த்தை நடத்தி வந்தது படக்குழு. தற்போது இதில் பங்கெடுக்க அவர் சம்மதம் தெரிவித்துள்ளார்.
பிரபலமான கேன்ஸ் திரைப்பட விழாவில் 'சங்கமித்ரா' அறிமுகப்படுத்தப்படுவதால் படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது. இதன் படப்பிடிப்பு தொடங்கப்படுவதற்கான ஆரம்பகட்ட பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகின்றன.
இந்தியளவில் தயாரிப்பு செலவில் அதிக முதலீடடில் உருவாகவுள்ள படம் 'சங்கமித்ரா' என்பது குறிப்பிடத்தக்கது.