திரையரங்குகளில் தேசிய கீதத்தை இசைப்பதைக் காட்டிலும் பாலியல் பலாத்காரர்களுக்கு மரண தண்டனை என்று காட்டுவது அதிக தேசப்பற்றுடையதாக இருக்கும் என நடிகர் சித்தார்த் கூறியுள்ளார்.
டெல்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் திகதி மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டார். இந்தச் சம்பவத்தில் நிர்பயா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்க்கில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு மீண்டும் மரண தண்டனை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்பு குறித்து பல்வேறு திரையுலக பிரபலங்கள் தங்களுடைய சமூகவலைத்தள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
இத்தீர்ப்பு குறித்து சித்தார்த் "திரையரங்குகளில் படத்துக்கு முன்பாக தேசிய கீதத்தை இசைப்பதைக் காட்டிலும் பாலியல் பலாத்காரர்களுக்கு மரண தண்டனை என்று காட்டுவது அதிக தேசப்பற்றுடையதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.