துருவங்கள் 16’ படத்தை இயக்கியவர் கார்த்திக் நரேன். அடுத்து ‘நரகாசூரன்’ படம் இயக்கி வருகிறார். அரவிந்த்சாமி, ஸ்ரேயா நடிக்கின்றனர். கார்த்திக்குடன் இணைந்து கவுதம்மேனன் இப்படத்தை தயாரிக்கிறார்.
இந்நிலையில் கார்த்திக் நரேன், கவுதம் மேனனுக்கு இடையே பண விவகாரத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கார்த்திக் நரேன் வெளியிட்ட டுவிட்டரில் ’சில நேரங்களில் தவறான நம்பிக்கை உங்களை கொன்றுவிடும்’ என குறிப்பிட்டிருந்தார்.
அதற்கு கவுதம் மேனன் பதில் அளிக்கும்போது,’என்னால் இந்த படத்துக்கு எந்த பிரச்னையும் இல்லை. படம் 3 வாரங்கள் ஓட வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். கார்த்திக் நரேன் ஒரு படம்தான் இயக்கி உள்ளார். 10 படங்கள் இயக்கிய பிறகு நான் செய்தது சரி என்பது அவருக்கு புரியும்’ என்றார்.
இந்நிலையில் ‘நரகாசூரன்’ பட ஹீரோ அரவிந்த்சாமி தனது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து "சில விஷயங்களில் நாம் இணைந்து வளரவேண்டும். நாம் மற்றவர்களுக்கு என்ன செய்கிறோம் என்பதை இரண்டு கண்கள் பார்க்கின்றன. உண்மை என்ன என்பதை இரண்டு காதுகள் கேட்டுக்கொண்டிருக்கின்றன. தவறு செய்யும்போது அதை நமது மனசாட்சி உணர்த்தும். அதை ஏற்றுக்கொள்வது, மன்னிப்பு கேட்பது தவறை உணர்வதுபோன்றவை இல்லாமல் இணைந்து வளர்வது என்ற வார்த்தைக்கே அர்த்தமில்லாமல்போய்விடும்" என குறிப்பிட்டிருக்கிறார்.