விக்ரம் வேதா’ படத்திற்கு பிறகு மும்பை சென்றார் மாதவன். திடீரென தோள் பட்டையில் வலி ஏற்பட்டது. வலி பொறுக்க முடியாமல் துடித்தவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தோளில் அறுவை சிகிச்சை நடந்தது, சிகிச்சைக்கு பின் ஒன்றிரண்டு வாரங்கள் ஓய்விலிருந்தவர் ஓரளவுக்கு குணம் அடைந்தார்.
சமீபத்தில் ரன்வீர் சிங் நடிக்கும் புதிய படத்தில் வில்லனாக நடிக்க மாதவனுக்கு வாய்ப்பு வந்தது. ரோஷித் ஷெட்டி இப்படத்தை இயக்கும் நிலையில் அதில் நடிக்கும் ஆர்வத்தில் இருந்தார் மாதவன்.
படப்பிடிப்புக்கு செல்வதற்கு முன் டாக்டரிடம் சென்று தோள்பட்டை அறுவை சிகிச்சை செய்ததை பரிசோதித்தபோது முழுமையான குணம் அடையவில்லை என்று தெரியவந்தது.
‘இப்போது படப்பிடிப்பில் பங்கேற்க வேண்டாம். இன்னும் ஓய்வு தேவை’ என்று டாக்டர்கள் கூறியதையடுத்து ரன்வீர் சிங் படத்திலிருந்து மாதவன் விலகினார்.
இதுகுறித்து வருத்தம் தெரிவித்துள்ள மாதவன்,’தோள்பட்டை சிகிச்சை காரணமாக ரோஷித் ஷெட்டி இயக்கும் படத்தில் நடிக்க முடியாமல் போனதை நினைத்து என் இதயம் நொறுங்கி விட்டது. இப்படத்தில் நடிக்க முடியாமல் போனது எனக்கு ஏற்பட்ட பெரிய இழப்பு’ என குறிப்பிட்டிருக்கிறார்