விட்டமின் பி3 உட்கொள்வதால் கருச்சிதைவு, பிறப்புக் குறைபாடுகள் ஏற்படும் வாய்ப்புகள் குறையலாம் என்று எலிகளைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
காரணியையும், தடுக்கும் வழிகளையும் கண்டுபிடித்துள்ளதால் இதை இரட்டைச் சாதனை என்று சிட்னியின் விக்டர் சாங் இன்ஸ்டிட்யூட்டைச் சேர்ந்த ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
உலகில் ஆண்டுக்கு 7.9 மில்லியன் குழந்தைகள் குறைபாடுகளோடு பிறப்பதால் இந்த ஆய்வின் முடிவுகள் மிகவும் பயனளிப்பதாக இருக்கும் என்று ஆய்வுக் குழு நம்புகிறது.
ஆனால் இக்கண்டுபிடிப்புகளை கருவுற்ற பெண்களுக்கான பரிந்துரையாக மாற்ற முடியாது என்று ஒரு வல்லுநர் குறிப்பிட்டுள்ளார்.
பலமுறை கருச்சிதைவுக்கு உள்ளான, அல்லது இதயம், சிறுநீரகம், முதுகெலும்பு, மேல் அன்னம் ஆகியவற்றில் குறைபாடுகளோடு குழந்தைகளைப் பெற்றெடுத்த நான்கு குடும்பங்களின் டி.என்.ஏ.க்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இரண்டு மரபணுக்களில் ஏற்பட்ட உருமாற்றங்களால் குழந்தைகளிடம் நிக்கோடினாமைட் அடினைன் டைநியூக்ளியோடைட் (NAD) எனப்படும் இன்றியமையாத மூலக்கூறு போதிய அளவில் இல்லாமல் இருப்பதை இந்த ஆய்வு கண்டுபிடித்தது.
உறுப்புகள் இயல்பாக வளர்ச்சி அடையவும், செல்கள் ஆற்றலை உற்பத்தி செய்யவும் இந்த மூலக்கூறு மிகவும் அவசியம்.
இதே உருமாற்றங்களை ஆய்வுக்கூட எலிகளில் உருவாக்கினார் முன்னணி ஆய்வாளர் பேரா.சாலி டன்வுட்டி. அப்போது, கருத்தரித்த தாய் எலிகளுக்கு விட்டமின் பி3 உள்ளடங்கிய நியாசின் மருந்தை செலுத்தியபோது இந்த உருமாற்றங்கள் சரியாவதை அவர் அவதானித்துள்ளார்.
உடலில் 'நேட்' அளவுகளை அதிகரிக்கவும் கருச்சிதைவு, பிறப்புக் குறைபாடு ஆகியவற்றை முற்றாகத் தடுக்கவும் முடியும் என்று கூறிய அவர், குறைபாட்டுக்கான காரணியையும் அதைத் தடுக்கும் முறைகளையும் ஒரே ஆய்வில் கண்டறிவது அரிதானது எனக் குறிப்பிட்டுள்ளார்.