கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் அகில இலங்கை தமிழ் மொழித் தின விருது வழங்கல் விழா 2017ஆம் ஆண்டிற்கான நிகழ்வினை இம்முறை வடக்கு மாகாணத்தில் நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று அண்மையில் வட மாகாண கல்விப்பணிமனையில் நடைபெற்றது.
கல்வி ராஜாங்க அமைச்சர் வேலுசாமி ராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன், மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர், வலய கல்வி பணிப்பாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
குறித்த விருது வழங்கல் விழாவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பிரதம அதிதியாக அழைப்பதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இனங்களுக்கு இடையில் நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவையும் அழைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் தேசிய ரீதியில் நடைபெற்ற தமிழ் மொழித்தினத்தை முன்னிட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்படவுள்ளன.
இதன்போது பாடசாலை மாணவர்கள் பங்குபற்றும் கலை கலாச்சார ஊர்வலம் மற்றும் வட மாகாணத்தை பிரதிபலிக்கின்ற வகையில் பாரம்பரிய கலை கலாச்சார நிகழ்வுகளுடன் தென்னிந்தியாவின் பிரபல பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா தலைமையிலான சிறப்பு பட்டிமன்றம். புத்தக கண்காட்சி உட்பட பல முக்கிய நிகழ்வுகளும் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்படவுள்ளது.