'2.0' வெளியான பிறகு இந்தியர்கள் மட்டுமின்றி அயல் நாட்டினரும் படத்தைக் கொண்டாடுவர் என்று ரஜினி தெரிவித்துள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் '2.0'. இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றதால், விளம்பரப்படுத்தும் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளது படக்குழு.
இதன் முதற்கட்டமாக துபாயில் இன்று பிரம்மாண்டமான முறையில் இசை வெளியீட்டு விழா நடைபெறுகின்றது.
முன்னதாக டுபாயில் படக்குழு நேற்று ஊடகவியலாளர்களை சந்தித்தது. இச்சந்திப்பில் ரஜினி, அக்ஷய்குமார், ஏமி ஜாக்சன், இயக்குநர் ஷங்கர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் கலந்து கொண்டனர்.
ரஜினிகாந்த் கருத்து வெளியிடுகையில் “கடவுளின் கருணையாலும் மக்களின் அன்பாலும்தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். '2.0' படத்தில் என்னை நடிக்க வைத்த தயாரிப்பாளர் சுபாஷ்கரன் மற்றும் இயக்குநர் ஷங்கருக்கு நன்றி.
பெருமைமிக்க இந்தப் படத்தின் ஒரு பங்காக நான் இருப்பதில் மகிழ்ச்சி. இது நிச்சயம் பெருமைக்குரிய, பெரிய பட்ஜெட் படமாக இருக்கும். '2.0' வெளியான பிறகு இந்தியர்கள் மட்டுமின்றி அயல் நாட்டினரும் படத்தைக் கொண்டாடுவர்.“ எனக் குறிப்பிட்டார்.