சீனாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள சாங்கிங் நகரைச் சேர்ந்த ஒருவர், காணாமல் போன நிச்சயதார்த்த மோதிரம் திரும்பக் கிடைத்த மகிழ்ச்சியைக் கொண்டாட 5,000 பேருக்கான நூடுல்ஸ் செலவை ஏற்றுக்கொண்டுள்ளார்.
வாங் எனும் குடும்பப் பெயர் கொண்ட அந்த இளைஞர், தனது பெண் தோழியுடனான உறவின் முதலாம் ஆண்டின்போது, அவரிடம் தன் காதலைத் தெரிவித்து வியப்பூட்ட விரும்பியுள்ளார்.
ஓகஸ்ட் 13 அன்று, ஒரு உணவு விடுதியில் தன் பெண் தோழியைச் சந்தித்து, காதலைத் தெரிவிக்க விரும்பினார் அவர். அந்த உணவு விடுதியில் தான் காத்திருந்தபோது தன் தோழியிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வர, அவரை அப்பெண் பார்த்துவிடக்கூடாது என்று கருதி அங்கிருந்து மறைந்து வேறு இடத்திற்குச் சென்று விட்டார்.
திரும்பி வந்து பார்த்தவருக்கு, அதிர்ச்சிதான் மிஞ்சி இருந்தது. சுமார் மூன்று லட்சம் யுவான் மதிப்புள்ள மூன்று கரட் எடை கொண்ட, அவரின் காதல் பரிசான அந்த வைர மோதிரத்தை வைத்திருந்த பை காணாமல் போயிருந்தது.
ஆனால் எப்படியோ, ஒரு உள்ளூர் வாசி, சற்று நேரம் கழித்து அந்தப் பையை, உணவகத்தின் மேலாளர் யூ ஷியாஹுவாவிடம் ஒப்படைத்தார்.
எதிர்பாரா விதமாக வாங் அதே உணவு விடுதிக்கு, மீண்டும் வந்தார். அந்த மேலாளர் மூலம், கடைசியாக அது மீண்டும் வாங்கின் கைவசம் வந்தது. மகிழ்ச்சியில் திளைத்த வாங், தன்னிடம் அந்த விடுதியில் நாளொன்றுக்கு எத்தனை கிண்ணம் நூடுல்ஸ் அங்கு விற்பனையாகும் என்று கேட்டு, அவரிடம் 35,000 யுவங்களைக் கொடுத்துள்ளார்.
அது 5,000 பேரின் பசியைப் போக்க போதுமானதாக இருந்தது. "இன்று ஒரு நாள் மட்டும் அனைவரையும் இங்கு பணம் கொடுக்காமல் உன்னத் சொல்லுங்கள்," என்று கூறிவிட்டு வாங் சென்று விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாங் அளித்த நன்றிக் கடிதத்தில், அவரது பெண் தோழி தன காதலை ஏற்றுக்கொண்டு, திருமணத்துக்கு இசைவு தெரிவித்துவிட்டதை உறுதிப்படுத்தியுள்ளதோடு, "சாங்கிங் நகரில் நான் நேசிக்கும் பெண் மட்டுமல்லாமல், நிறைய நல்ல மனிதர்களும் இருக்கிறார்கள்," என்று குறிப்பிட்டுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.