ஐபிஎல் என அழைக்கப்படும் இந்தியன் பிரிமியர் லீக் இருபதுக்கு-20 கிரிக்கெட் போட்டிகளின் 10ஆவது தொடரின் தொடக்க விழா நேற்று ஹைதராபாத் ரஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது.
லகான் திரைப்பட பாடலுடன் தொடக்க விழா ஆரம்பமானது. முதல் நிகழ்ச்சியாக இந்திய அணிக்காக பல ஆண்டுகள் விளையாடிய சச்சின் டென்டுல்கர், சவ்ரவ் கங்குலி, விரேந்தர் செவாக் மற்றும் வி.வி.எஸ்.லக்ஸ்மன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
சச்சின் உள்ளிட்ட நால்வருக்கும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் சி.கே.கண்ணா, நிர்வாக் குழு தலைவர் வினோத் ராய், சபையின் செயலாளர் அமிதாப் சவுத்தி, இந்தியன் பிரிமியர் லீக்கின் தலைவர் ராஜீவ் சுக்லா ஆகியோர் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
இதையடுத்து கடந்த ஆண்டு இரண்டாம் இடத்தைப் பிடித்த பெங்களூரு ரோயல் செலஞ்சர்ஸ் அணியின் தலைவர் விராட் கோஹ்லி, பாரம்பரிய நடன கலைஞர்கள் நடனமாட விழா மேடைக்கு அழைத்துவரப்பட்டார்.
இதன் பின்னர் நடப்பு சாம்பியனான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைவர் டேவிட் வோர்னர் கிண்ணத்துடன் விழா மேடையை வந்தடைந்தார்.
நடிகை எமிஜாக்சன், நடன கலைஞர்களுடன் இணைந்து சில இந்தி பாடல்களுக்கு நடனமாடினார். இதனையடுத்து வேறுபல கலை நிகழ்வுகள், வான வேடிக்கைகள் என அரங்கமே கலைகட்டியது.
இதையடுத்து நடைபெற்ற முதலாவது போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
காயம் காரணமாக விராட் கோஹ்லி விளையாடாத நிலையில் சேன் வொட்சன் தலைமையில் பெங்களூரு அணி களமிறங்கியது.
நாணய சுழற்சியில் தோல்வியடைந்த ஹைதராபாத் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய வோர்னர் 14 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். ஷிகர் தவாண் 31 பந்துகளில், 5 நான்கு ஓட்டங்கள் அடங்களாக 40 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தாார்.
யுவராஜ் சிங் 27 பந்துகளில், 3 ஆறு ஓட்டங்கள் 7 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்களாக 62 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். இறுதியில் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 207 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
208 என்ற வெற்றியிலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு கிறிஸ் கெய்ல், மன்தீப் சிங் ஆகியோர் சிறந்த ஆரம்பத்தை கொடுத்தனர். எனினும் கிறிஸ் கெய்ல் 21 பந்துகளில் 3 ஆறு ஓட்டங்கள் 2 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்களாக 32 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.
ஏனைய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறிய நிலையில் 19.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்த ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 172 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 35 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
அஷிஸ் நெஹ்ரா, ரஷித் கான், புவனேஷ்வர் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.