சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் கால் இறுதிப் போட்டியில் மெஸ்ஸி உள்ளிட்ட நட்சத்திர வீரர்களை கொண்ட பார்சிலோனா அணி, இத்தாலியின் கழகமான ரோமா அணியிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்து வெளியேறியது.
ஐரோப்பிய கால்பந்துக் கழக அணிகள் மோதும் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் 2 ஆம் கட்ட கால் இறுதிப் போட்டிகள் நடந்து வருகின்றன.
இத்தொடரில் கால் இறுதி, அரை இறுதி போட்டிகள் 2 கட்டமாக நடத்தப்படும். அதாவது, கால் இறுதியில் மோதும் இரு அணிகளின் சொந்த மண்ணில் ஒவ்வொரு போட்டிகள் நடத்தப்படும். இரு போட்டியையும் சேர்த்து அதிக கோல் அடிக்கும் அணி அரை இறுதிக்கு தகுதி பெறும். அந்த வகையில், முதல் கட்ட கால் இறுதியில் பார்சிலோனா அணி தனது சொந்த மண்ணில் ரோமா அணியை 4-1 என்ற கோல் வீழ்த்தியது.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2 ஆம் கட்ட கால் இறுதி போட்டி நேற்று முன்தினம் இரவு இத்தாலி தலைநகர் ரோம் நகரில் நடந்தது.
இதில் எதிர்பார்க்காத வகையில் ரோமா அணி 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது. எடின் 6 ஆவது நிமிடத்திலும், டி ரோஸி 58 ஆவது நிமிடத்திலும், மனோலஸ் 82 ஆவது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.
இதன் மூலம், இரு போட்டிகளையும் சேர்த்து 4-4 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது. இதில், எதிரணி மண்ணில் ஒரு கோல் அடித்ததன் காரணமாக, ரோமா அணி அரை இறுதிக்கு முன்னேறியது. பார்சிலோனா தொடரிலிருந்து அதிர்ச்சியுடன் வெளியேறியது.
சுமார் 30 ஆண்டுக்கு பிறகு ஐரோப்பிய தொடரில் ரோமா அணி அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது. இதற்கு முன் 1984 இல் ஐரோப்பிய கிண்ண இறுதிப்போட்டியில் விளையாடியது. இந்த வெற்றியை இத்தாலி ரசிகர்கள் ஆரவாரமாக கொண்டாடி மகிழ்ந்தனர். சாம்பியன்ஸ் லீக் தொடரில் 5 முறை சாம்பியனான பார்சிலோனா, தொடர்ந்து 3 ஆவது முறையாக கால் இறுதியில் வெளியேறியிருப்பது குறிப்பிடத்தக்கது.