டுபாயில் தன்னைத் தொடர்பு கொண்டு ஆட்ட நிர்ணயம் செய்ய முயன்றவரைப் பற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தலைவர் சர்ஃபராஸ் அஹமட் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் இலங்கை அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் தலைவர் சர்ஃபராஸ் அஹமட் ஒருவர் அணுகி ஆட்ட நிர்ணம் குறித்து பேசியுள்ளார்.
ஆனால் அவரது கோரிக்கையை உடனடியாக மறுத்துள்ள சர்ஃபராஸ் சம்பந்தப்பட்ட ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு நடந்தவற்றை சொல்லியுள்ளார். இந்த சம்பவம் பாகிஸ்தான் அணி நிர்வாகத்தை உலுக்கியுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம், பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதற்காக ஷர்ஜீல் கான், காலித் லத்தீஃப் என இரண்டு பாக். வீரர்கள் தடை செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து, ஃபிக்ஸிங் செய்வது இனி நடக்காது என அதிகாரிகள் எண்ணிய நிலையில், சர்ஃபராஸ் சம்பவம் ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
"இந்த விடயம் சரியான முறைப்படி கையாளப்பட்டுள்ளது. சர்ஃபராஸுக்கு அதிக மரியாதை கிடைத்துள்ளது. விளையாட்டை ஊழலாக்க நினைக்கும் முயற்சிகளை எப்படி தவிர்க்க வேண்டும் என்று ஒரு தலைவராகவும், வீரராகவும் அணியில் மற்றவர்களுக்கு நல்ல உதாரணமாக அவர் இருந்துள்ளார்" என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
அணியின் தலைவர் மிக்கி ஆர்தரின் வற்புறுத்தலின் பெயரில், ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடந்து வரும் ஒரு நாள் தொடரில் பங்குபெறும் வீரர்களுக்கான விதிமுறைகள் சற்று தளர்த்தப்பட்டிருந்தன.
நண்பர்களை சந்திக்கவும், பொருள் கொள்வனவு மற்றும் வெளியே சாப்பிடப் போகவும் அனுமதி வழங்கப்பட்டிருந்தன. ஆனால் தற்போது சர்ஃபராஸ் சம்பவத்தால் விதிமுறைகள் மீண்டும் கடுமையாக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.