lan sinlan eng

தரமணியிலும் நிறைய குறைகள் இருக்கின்றன

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

'தரமணி'யிலும் நிறைய குறைகள் இருக்கின்றன என்று அப்படத்தின் இயக்குனர் ராம் தெரிவித்தார்.

ராம் இயக்கத்தில் வசந்த் ரவி, ஆண்ட்ரியா, அஞ்சலி, அழகம் பெருமாள் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் 'தரமணி'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இதனைத் தொடர்ந்து 'தரமணி' வெற்றி ஊடகவியலாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டார்கள்.

“2007இல் இயக்குனராக அறிமுகமானேன். கடந்த 10 ஆண்டுகளில் திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் தொலைபேசி வாயிலாக, மக்கள் வருகிறார்கள், கைதட்டிஇ ரசிக்கிறார்கள், படம் ஓடிவிடும் என்று கேட்பது இதுவே முதல் முறை. எனது முதல் 2 படங்களில் இது நடக்கவில்லை. அப்படி நடக்கவில்லை என்பதால் அடுத்த படங்கள் தாமதமானது.

கடந்த 3 வருடங்கள் 8 மாதங்களாக ஒரு படத்தைத் தாங்கிப் பிடித்திருப்பது இயக்குனரின் அணி மட்டுமே என நினைக்கிறேன். இக்கதையை யோசிக்கும் போது புதுமையாக இருந்தது. இடையே 'ஓ காதல் கண்மணி' மற்றும் 'இறைவி' ஆகிய படங்களும் இதே பாணியிலான கதை என்னும் போது, குப்பைத் தொட்டிக்கு 'தரமணி' போகும் சூழல் இருந்தது. இதற்கு இடையே சமூகத்திலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருந்தன.

கதையை யோசித்து முதல் பாதி படப்பிடிப்பு முடியும் வரை வட்ஸ் ஆப் என்ற ஒன்று கிடையாது. ஆகையால் இரண்டாம் பாதியில் வட்ஸ் ஆப் சம்பந்தப்பட்ட காட்சிகள் இருக்கும். இப்படம் வெளியாகும் போது ஏற்றுக் கொள்வார்களா, மாட்டார்களா என்ற பயமிருந்தது. தயாரிப்பாளர் மிகவும் நம்பினாலும், முந்தைய 2 படங்கள் மூலம் கொஞ்சம் பயமிருந்தது.

'தரமணி' படத்தின் தாமதம் ஏதோ ஒரு வகையில் வெற்றிக்கு உதவியாக இருந்திருக்கிறது. அதற்கு ஜே.எஸ்.கேவுக்கு மட்டுமே நன்றி சொல்ல வேண்டும். இப்படத்துக்கு வட்டி எல்லாம் சேர்ந்து ஐந்தரை கோடி வரை ஆனது. யாருமே வாங்க வராத சூழலில், அவரே தனியாக வெளியிட வேண்டிய சூழல் ஏற்பட்டது. திரையரங்க வசூலை மட்டுமே தற்போது தமிழ் சினிமா நம்பியிருக்கும் சூழலில் ஐந்தரை கோடி படத்தை வெளியிட கடந்த ஓராண்டாக போராடிக் கொண்டிருந்தோம்.

'விவேகம்' படத்தோடு 'தரமணி' வெளியீடு என்று ஜே.எஸ்.கே அறிவித்த போது, இது எவ்வளவு விவேகமற்ற செயல் என்று சொன்னேன். அப்போது ஆண்ட்ரியா "படம் வெளியானால் போதும், அதுவே நமக்கு பெரிய வெற்றி" என்று சொன்னார்.

படத்தின் விளம்பரங்களில் மீம்ஸ் பாணியில் செய்வதற்கு காரணம் என்னவென்றால் என் படத்துக்குள் அது இருந்தது. முக்கியமான காட்சி போய்க் கொண்டிருக்கும் போது, அதை கட் செய்து இடையே 2 வார்த்தைகள் பேசியிருப்பேன். அதை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று முதலில் தெரியவில்லை. ஆகையால்தான் மக்களை படம் எந்த மாதிரி இருக்கும் என்பதை தெளிவுபடுத்துவதற்கே விளம்பரங்களை மீம்ஸ் பாணியில் வெளியிட்டோம். ஆனால், எங்களுக்கு விளம்பரங்கள் மக்களிடையே படத்தை பெருவாரியாக கொண்டு போய் சேர்த்தது.

'தரமணி'யிலும் நிறைய குறைகள் இருக்கின்றன. ஒரு பயங்கரமான மாற்று சினிமா எடுத்துவிட்டேன், உலகத்திற்கான ஒரு சினிமா எடுக்க முயற்சித்துள்ளேன் என்று சொல்ல விரும்பவில்லை. இன்னும் இயக்கத்தில் கற்றுக் கொண்டுதான் இருக்கிறேன். ஒரு காட்சியை நல்லபடியாக எடுத்துவிட்டால், அடுத்த காட்சி எப்படி என்ற குழப்பம் வந்துவிடுகிறது.

ஆண்ட்ரியா முதன் முறையாக இப்படத்தில்தான் நடிகரில்லாமல் நடித்துள்ளார் என நினைக்கிறேன். எப்போதுமே புதுமுக நடிகர்களோடு நடிப்பது என்பது நடிகர்களுக்கு சவாலான விஷயம்.“ எனக் குறிப்பிட்டுள்ளார். 

Face Book Setup 01

 

Back to top
Go to bottom