மற்றவர்களுக்கு உத்வேகம் தருவதில் அஜித்துக்கு நிகர் அவரே என்று ஹொலிவுட் நடிகை அமிலா டெர்சிமெஹிக் தெரிவித்துள்ளார்.
ஓகஸ்ட் 24ஆம் திகதி 'விவேகம்' வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இப்படத்தில் அஜித்தின் தீவிரவாத ஒழிப்பு குழுவின் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார் ஹொலிவுட் நடிகை அமிலா டெர்சிமெஹிக் அஜித்துடன் நடித்தமை தொடர்பில் அவர் கூறுகையில், 'விவேகம்' போன்ற ஒரு உலகத்தரம் வாய்ந்த சர்வதேச படத்தின் மூலம் இந்திய சினிமாவில் கால் பதிப்பது பெரிய பெருமை. இந்த வாய்ப்பினை அளித்த இயக்குனர் சிவாவிற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஹொலிவுட்டில் பியர்ஸ் பிராஸ்னன் நாயகனாக நடித்த 'தி நவம்பர் மேன்' படத்தில் செய்திருந்த கதாபாத்திரத்தை பார்த்த இயக்குனர் சிவா 'விவேகம்' பட வாய்ப்பினை எனக்களித்தார் என அறிந்தேன்.
'விவேகம்' படத்திற்காக நடிப்பு மட்டுமின்றி சண்டை காட்சிகளில் கடின சண்டை போடும் திறனும் தேவைப்பட்டது.
அக்ஷன் படங்களின் ரசிகையாக எனக்கு இயக்குனர் சிவா கூறிய 'விவேகம்' படத்தின் கதையும், கதாபாத்திரமும் மிகவும் பிடித்திருந்தது. அஜித்குமாரை முதல் முறையாக சந்திப்பதற்கு முன்னரே இந்திய சினிமாவில் எவ்வளவு பெரிய நட்சத்திரம் என்பதை தெரிந்துகொண்டேன். ஆனால் சந்தித்த பொழுது துளி கூட தலைக்கனம் இல்லாமல் அவ்வளவு எளிமையாக மனிதராக எல்லோருடனும் பழகினார். அவருடைய தொழில் பக்தி நான் இதுவரை வேறெந்த நடிகரிடமும் பார்த்ததில்லை.
அனைத்து ஆபத்தான சண்டை காட்சியிலும் தானே நடித்துக் கொடுத்தார். இவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் இன்னமும் அவரது கண்களில் ஒரு சிறுவனின் துள்ளல் உள்ளது. எனது சினிமா வாழ்க்கையும் இந்த உலகத்தையும் அஜித்தின் கண்ணோட்டத்திலேயே கண்டு வாழ விரும்புகிறேன். மற்றவர்களுக்கு உத்வேகம் தருவதில் அவருக்கு நிகர் அவரே.“ எனக் குறிப்பிட்டுள்ளார் ஹொலிவுட் நடிகை அமிலா டெர்சிமெஹிக்