தென்னிந்திய சினிமாவில் முதன் முறையாக 'மெர்சல்' படம் வணிகச் சின்னம் (TRADEMARK) முத்திரையை பெற்றுக்கொண்டுள்ளது.
தங்களுடைய 100ஆவது தயாரிப்பாக உருவாகி வரும் 'மெர்சல்' படத்தை பல்வேறு வகையில் விளம்பரப்படுத்தி வருகிறது தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம்.
தற்போது 'மெர்சல்' என்ற தலைப்புக்கு வணிகச் சின்னம் (TRADEMARK) வாங்கியுள்ளது படக்குழு. 'மெர்சல்' தலைப்பை வேறு ஏதாவது பொருளுக்கு உபயோகித்தால், தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு ஒரு பங்கினை கட்டணமாக (royalty) செலுத்த வேண்டும்.
தென்னிந்திய திரையுலகில் ஒரு படத்தின் பெயருக்கு வணிகச் சின்னம் பெற்றிருப்பது இதுவே முதல் முறையாகும். இதன் மூலம் இந்தத் தலைப்பு நான் பதிவு செய்து வைத்திருந்தது என யாருமே உரிமைக் கொண்டாட முடியாது. இதற்கு முன்பாக 'Why this Kolaveri di' பாடலுக்கு வணிகச் சின்னம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் 'மெர்சல்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வடிவமைப்பை வைத்து ட்விட்டரில் எமோஜி உருவாக்கினார்கள். தென்னிந்திய படங்களில் முதல் ட்விட்டர் எமோஜி கொண்ட படம் 'மெர்சல்' என சாதனையைப் பெற்றது.
தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவுள்ள 'மெர்சல்' படத்தின் இறுதிகட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. அட்லீ இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன், சத்யராஜ், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.