'மெர்சல்' படத்தை விளம்பரப்படுத்துவதை ஃபேஸ்புக் மெசஞ்சர் மூலமாக புதுமையாக செய்து வருகிறது தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள 'மெர்சல்' பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் ஆகஸ்ட் 20ஆம் திகதி பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட 'ஆளப்போறான் தமிழன்' பாடல் சமூகவலைத்தளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
இந்நிலையில் தீபாவளி வெளியீட்டுக்கு தயாராகி வரும் இப்படத்தை விளம்பரப்படுத்துவதில் புதுமையை கையாண்டுள்ளது தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம். ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் ஃபேஸ்புக் மெசஞ்சர் வழியாக ரசிகர்கள் 'மெர்சல்' படத்தின் போஸ்டரில் தங்களுடைய பெயருடன் உடனடியாக பெறலாம்.
அதற்கான இணைப்பு: (http://m.me/ThenandalFilms). இதன் மூலம் பலரும் தங்களுடைய பெயரிட்ட போஸ்டர்களை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். தென்னிந்திய சினிமாவில் முதன்முறை என்பதால் பலரும் இதற்கு வரவேற்பு தெரிவித்திருக்கிறார்கள்.
அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள 'மெர்சல்' படத்தில் விஜய், நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா, வடிவேலு, சத்யராஜ், யோகி பாபு, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை தங்களுடைய தயாரிப்பில் 100ஆவது படமாக பெரும் பொருட்செலவில் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
'மெர்சல்' பணிகளை முடித்துவிட்டு, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் விஜய். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.