நடிகை பாவனா கடத்தல் வழக்கில் மலையாள திரையுலகின் முன்னணி நடிகை காவ்யா மாதவனிடம் அந்த மாநில பொலிஸார் நேற்று 6 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.
கடந்த பெப்ரவரி 17ஆம் திகதி படப்பிடிப்பு முடிந்து காரில் வீடு திரும்பி கொண்டிருந்த பிரபல நடிகையை கொச்சி அருகே ஒரு கும்பல் கடத்தியது.
அவரை சுமார் 4 மணி நேரம் பாலியல் ரீதியாக துன்புறுத்திய அந்த கும்பல், அதனை காணொளியாக பதிவு செய்தது.
இந்த சம்பவம் தொடர்பாக பல்சர் சுனில், நடிகையின் சாரதி மார்ட்டின் அந்தோனி உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் திடீர் திருப்பமாக நடிகர் திலீப் கடந்த 10ஆம் திகதி கைது செய்யப்பட்டார். அவரது உத்தரவின்பேரிலேயே நடிகை கடத்தப்பட்டதாக பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளனர்.
வழக்கின் முக்கிய குற்றவாளி பல்சர் சுனில் பொலிஸில் அளித்துள்ள வாக்குமூலத்தில் நடிகர் திலீபின் மனைவியான நடிகை காவ்யா மாதவனின் ஆடை நிறுவனத்தில், கடத்தப்பட்ட நடிகையின் காணொளி பதிவுகள் அடங்கிய மெமரி கார்டை அளித்ததாக தெரிவித்திருந்தார்.
அதனடிப்படையில் கடந்த ஜூன் 30ஆம் திகதி காவ்யா மாதவனின் ஆடை நிறுவனத்தில் பொலிஸார் சோதனை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து ஆலுவாவில் உள்ள திலீபின் வீட்டுக்கு நேற்று சென்ற தனிப் படை பொலிஸார் நடிகை காவ்யா மாதவனிடம் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் முக்கிய தகவல்கள் கிடைத்ததாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.