அன்னை தெரேசா அணிந்த நீல நிற மூன்று கோடுகளை ஓரமாக கொண்டிருக்கும் வெள்ளை நிற சேலைக்கு வியாபாரக் குறியீடு வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வெள்ளை சேலை வணிக ரீதியாக தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கும் நோக்கில் அன்னை தெரேசா நிறுவிய மி“ஷனரிஸ் ஒப் செரிட்டி துறவற சபை“க்கு இந்த வியாபார அடையாள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அன்னை தெரேசாவை "கொல்கத்தா புனித தெரேசா" என்று வத்திக்கான் புனிதராகப் பிரகடனப்படுத்திய நேரத்தில் இந்த நீல நிற ஓரமுடைய வெள்ளை சேலை "மிஷனரிஸ் ஒப் செரிட்டி" துறவற சபையினருக்கு அறிவு சார் சொத்துரிமையாக இந்திய அரசு வழங்கியது.
ஆனால்இ அந்த நேரத்தில் பொதுவெளியில் அறிவிக்காமல் இதனை ரகசியமாக வைத்துக்கொள்ள இந்த துறவற சபை முடிவு செய்திருந்தது.
மூன்று நீல நிற கோடுகளை ஓரமாக கொண்ட வெள்ளை சேலை அணிந்து கொண்டு இந்தியாவின் கொல்கத்தா (கல்கத்தா) மாநகரில் ஏழைக்ளுக்காக சுமார் அரை நுற்றாண்டாக அன்னை தெரேசா சேவை செய்துவந்தார்.
இந்த வெள்ளை சேலையின் ஓரத்தில் அமைந்திருக்கும் மூன்று நீல நிற கோடுகளில் ஒன்று, பிற இரு நீல நிற கோடுகளை விட சற்று அகலமானதாக இருக்கும்.
2013ஆம் ஆண்டு இதற்கான வியாபாரக் குறி அடையாளத்தை பெறுவதற்கு விண்ணப்பித்தாக கூறுகிறார் இந்த துறவற சபையினருக்காக சட்ட ரீதியான பணிகளை நிறைவேற்றுகின்ற கொல்கத்தாவை மையமாகக் கொண்டு வேலை செய்துவரும் பிஸ்வாஜித் சர்க்கார்.
எதிர்காலத்தில் வணிக நோக்கத்திற்காக தவறாக பயன்படுத்தப்படும் நிலையை தடுப்பதற்காக இந்த நீல நிற ஓரமுடைய வெள்ளை சேலை பாதுகாக்கப்பட வேண்டும் என்று எனது மனதில் உதித்தது" என்று இந்த சட்டத்தரணி கூறுகிறார்.
"யாராவது இந்த சேலையை அணியவோ அல்லது இந்த நிற வகையை பயன்படுத்தவோ விரும்பினால் எங்களுக்கு எழுதலாம். அதில் வணிக நோக்கம் இல்லை என்று உணர்ந்தால் நாங்கள் அனுமதிப்போம்" என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
மூன்று தசாப்தங்களுக்கு மேலாக கொல்கத்தா புறநகரில் இந்த சபையினரால் நடத்தப்பட்டு வந்த இல்லத்தில் வாழ்ந்த தொழுநோயாளிகள் இந்த சேலைகளை தான் அணிந்து வந்தனர்.
இறப்புக்கு முன்னால் "தன்னுடைய பெயர் வணிக நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படக்கூடாது என்று அன்னை தெரேசா ஆணைகள் வழங்கியதாக இந்த துறவற சபையின் கன்னியாஸ்திரிகள் தெரிவிக்கின்றனர்.