ஈரானிய இயக்குநரான மஜித் மஜிதி தற்போது இயக்கிவரும் 'பியாண்ட் த க்ளவுட்ஸ்' என்ற படம் தமிழிலும் தயாராகிறது.
'பாதுக்' என்ற ஈரானியப் படத்தின் மூலம் இயக்குநரானவர் மஜித் மஜிதி. அறிமுகமான முதல் படத்திலேயே சிறந்த திரைக்கதைக்கான சர்வதேச விருதினை வென்றவர். அதைத் தொடர்ந்து 'சில்ரன் ஆஃப் ஹெவன்', 'த கலர் ஆஃப் பரடைஸ்', 'பாரன்', 'த வில்லோ ட்ரீ', 'த சாங் ஆஃப் ஸ்பாரோஸ்', 'மொஹமத் த மெசன்ஜர் ஒஃப் கோட்' ஆகிய திரைப்படங்களை இயக்கி சர்வதேச அளவில் கவனம் ஈர்த்தவர்.
இவர் தற்போது இயக்கும் படத்துக்கு 'பியாண்ட் த க்ளவுட்ஸ்' என்று தலைப்பு வைத்துள்ளார். அண்ணன் தங்கை இடையேயான உறவை மையப்படுத்திய இப்படம் ஆங்கிலம், இந்தி, தமிழ் என மும்மொழிகளில் ஒரே சமயத்தில் உருவாகி வருகிறது.
இந்தியின் முன்னணி நடிகரான ஷாகித் கபூரின் இளைய சகோதரர் இஷான் கட்டார் கதையின் நாயகனாகவும், மாளவிகா மோகனன் கதையின் நாயகியாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் தமிழ் திரையுலகின் மூத்த நடிகையான ஜி.வி.சாரதா நடிக்கிறார்.
இந்தப் படம் தமிழில் தயாராகி வருவதற்கான விளக்கத்தை படக்குழு தெரிவிக்கும் போது, 'இக்கதையில் மூன்று மொழிகள் இயல்பாகவே இடம்பெறுகிறது. அதனால் மூன்று மொழிகளுக்கான மூல அடையாளங்களை நில மற்றும் ஏனைய பின்னணிகளுடன் அதன் பாரம்பரிய தன்மை மாறாமல் படமாக்கி வருகிறோம்.
ஏனைய திரைப்படங்களைப் போல் நடிகர்களை மட்டும் இடம் மாற்றி, வசனங்களை அந்தந்த மொழிக்கேற்றவாறு சாதாரணமுறையில் மொழிபெயர்ப்பு செய்து, பேச வைத்து படமாக்கவில்லை' என்று தெரிவித்துள்ளது.