'ஜல்லிக்கட்டு 5-23 ஜனவரி 2017' என்ற படத்தின் படப்படிப்பு ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் நடைப்பெற்றதாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான, அஹிம்சா கூறியுள்ளது.
இப்படப்பிடிப்புதான், ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்திய திரைப்படம் ஒன்றின் முதலாவது படப்பிடிப்பு என
அத்திரைப்படத்தின் இயக்குனர் சந்தோஷ் தெரிவித்துள்ளார்.
அந்த திரைப்படம் குறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “இந்த திரைப்படத்தின் கதையானது தமிழகத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைப்பெற்ற ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான எழுச்சியையும், அது தொடர்பான போராட்டங்களையும் அடிப்படையாக கொண்டது“ என்று கூறப்பட்டுள்ளது.
படப்பிடிப்பு குழு, ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் தேர்வுக் குழுவிடம் இந்த திரைப்படத்தின் கதையை கருவை அளித்தது. திரைப்படத்துக்கான கருவைப் பாராட்டிய பல்கலைக்கழக குழு, படப்பிடிப்புக்கு உடனடியாக ஆதரவளித்ததாக, தெரியவருகின்றது.
மூன்று நூற்றாண்டுகளாக ஜான் எஃப் கென்னடி, அல் கோர், பராக் ஒபாமா உள்ளிட்ட பல ஆளுமைகளை உருவாக்கிய இந்த பல்கலைக்கழகத்தில் படப்பிடிப்பு நடத்திய முதல் இந்திய திரைப்படம் இதுவாகும் என்று கூறப்படுகின்றது.
திரைப்பட நடிகர் கமலஹாசன் உரை நிகழ்த்திய வளாகத்தில், இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்றது.
இதற்கு முன், அந்த பல்கலைக்கழக வளாகத்தில் `குட் வில் ஹண்ட்டிங், சோஷியல் நெட்வொர்க், மற்றும் தி கிளாசிக் லவ் ஸ்டோரி ஆகிய விருது பெற்ற திரைப்படங்களின் படப்பிடிப்பு நடைப்பெற்றுள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டை சென்னையில் நடத்தும் முயற்சியில் இருக்கிறோம். அந்நிகழ்வில் இத்திரைப்படம் வெளியாகும், என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.