மொடல்களின் புகைப்படங்களை மேலும் மெருகேற்றிக் காட்ட 'ரீ டச்சிங்' எனச் சொல்லப்படும் யுக்தி கையாளப்படுவது இரகசியமான விடயமொன்றும் அல்ல. மொடல்களின் உடலில் சில பாகங்களை மெலிவாக்கவும், சிலவற்றை வளைவாக்கவும், மாடல்கள் அணிந்த உடைக்கு ஏற்றவாறு கால்களின் நீளத்தை சரிசெய்யவும், கண்களை விரிவாக்கவும் புகைப்படங்களில் 'ரீ டச்சிங்' எனும் திருத்தங்கள் செய்யப்படுகின்றன.
ஃபிரான்ஸ் நாட்டில், கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் வணிகநோக்கில் பயன்படுத்தப்படும் எந்த புகைப்படத்திலும் அதில் உள்ள மொடல்களை ஒல்லியாகக் காட்டும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மாற்றங்களைச் செய்திருந்தால் 'இந்தப் படம் எடிட் செய்யப்பட்டிருக்கிறது' என சிகரெட் பக்கெட்டில் உள்ள எச்சரிக்கைகளைப் போல குறிப்பிட வேண்டும்.
இந்த விதியை மீறுபவர்களுக்கு எதிராக 37,500 யூரோக்கள் அல்லது அந்த விளம்பரத்தை எடுப்பதற்கு செலவிடப்பட்ட தொகையில் 30% அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மொடல் தொழிலுக்காக தங்களை மிகவும் மெலிவாக்கிக் கொள்பவர்களுக்கு இதுபோன்ற சட்டங்கள் உதவும் என நம்பப்படுகிறது.
மேலும் எதிர்பார்த்த அளவுக்கு தங்களது உருவப் புகைப்படங்கள் இல்லாததால் பெருங்கவலை கொள்பவர்களிடத்தில் அவர்கள் காணும் பல மொடல்களின் புகைப்படங்கள் கணினி நிரல்கள் மூலமாக உருவாக்கப்பட்ட போலியானவை என புரியவைக்க உதவும் என நம்பப்படுகிறது.
"செயற்கையாக திருத்தங்கள் செய்யப்பட்டு மற்றும் நம்பமுடியாத வகையில் இருக்கும் புகைப்படங்களை அம்பலப்படுத்துவது, உருவம் தொடர்பாக இளைஞர்கள் மத்தியில் உள்ள சுய மதிப்பிறக்கம் மற்றும் தன்னம்பிக்கை குறைவு போன்றவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும்“ என்கிறார் சுகாதார அமைச்சர் மரிசொல் டூரைன்.
இதுபோன்ற விதிமுறைகளை அறிமுகப்படுத்தும் முதல் நாடு ஃபிரான்ஸ் அல்ல. உதாரணமாகச் சொல்ல வேண்டுமெனில் இஸ்ரேல் ஏற்கனவே இதைச் செய்திருக்கிறது.
ஆனால், மெலிந்த தேகத்துடன் இருப்பது ஃபிரான்சில் அதிகளவில் கவனம் ஈர்த்துள்ளது. அந்நாட்டிலுள்ள ஆயிரக்கணக்கன மக்கள் அனோரெக்சியா எனும் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர் (அனோரெக்சியா என்பது மெலிந்த தேகத்துடன் உடல் எடையை குறைவாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதால் உண்ணுதல் ஏற்படும் பிரச்சனையால் உண்டாகும் ஒரு மன நலன் சார்ந்த கோளாறு)
''விளம்பரங்கள் தனது தயாரிப்புகளை விட அதிகம் விற்கின்றன. விளம்பரங்கள் மதிப்புகளை விற்கின்றன; புகைப்படங்களை விற்கின்றன ; காதல் மற்றும் பாலியலை வெற்றிகரமாக விற்கின்றன. மிக முக்கியமாக இயல்புகளையும் விற்கின்றன. ஒரு கட்டத்தில் அவர்கள் நாம் யாராக இருக்க வேண்டும் என சொல்ல ஆரம்பிக்கிறார்கள்" என்கிறார் மூத்த விரிவுரையாளரும் பிரசாரகருமான ஜீன் கில்போர்ன்.
இந்த புதிய விதி அறிவிக்கப்பட்டதிலிருந்து புகைப்படங்களை விற்கும் நிறுவனமான கெட்டி, 'ரீ டச்சிங்' செய்யப்பட்ட புகைப்படங்களை வணிகப்பகுதியில் இடம்பெற முடியாதவாறு தடை செய்திருக்கிறது.