மகேஷ்பாபுவுடன் நடிக்கவிருப்பது குறித்து விஜய் என்ன கூறினார் என்பது தொடர்பில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்திருக்கிறார்.
'ஸ்பைடர்' படத்தின் ஊடக சந்திப்பில் "விஜய் - மகேஷ்பாபு இணைந்தால் இயக்கத் தயாரா?" என்று ஏ.ஆர்.முருகதாஸிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு "கண்டிப்பாக இயக்குவேன்" என்று பதிலளித்தார்.
அதற்கான பணிகளை முன்பாகவே தொடங்கியுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். இதற்காக விஜய் - மகேஷ்பாபு இருவரிடமும் பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளார்.
'ஸ்பைடர்' படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி ஒன்றில், இக்கூட்டணி குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் "தெலுங்கில் விஜய் சார் வில்லன். தமிழில் மகேஷ் பாபு சார் வில்லன். இந்த மாதிரி ஒரு கதை இருக்கிறது பண்ணலாமா என்று விஜய் சாரிடம் கேட்டேன். ஒ.கே அண்ணா, நான் தயார் என்றார். இது குறித்து மகேஷ்பாபு சாரிடமும் பேசியுள்ளேன்.
நீங்கள் முழுமையாக கதாபாத்திரங்களை எழுதிவிட்டு மகேஷ்பாபு சார் இக்கதாபாத்திரத்தை செய்தார் என்றால் நான் நடிக்கிறேன் என்று விஜய் சார் தெரிவித்தார். வேறொரு நாயகன் என்றால் நடிக்க மாட்டேன் என்றும் குறிப்பிட்டார்" என்று தெரிவித்துள்ளார்.
தற்போது விஜய் நடிக்கவுள்ள படத்தின் பணிகளைத் தீவிரப்படுத்தி இருக்கிறார் இயக்குநர் முருகதாஸ். அடுத்தாண்டு தொடக்கத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.