நவீனகால மருந்துகள் இல்லாத அந்த காலகட்டத்தில், மனநோயாளிகளை அடைத்து வைத்தல், கட்டிப் போடுதல் போன்ற நீண்டகால சிகிச்சை முறைகளில் இருந்து சில தீவிர மனநலக் குறைபாடுகளுக்கு துரித நிவாரணியாக மின்னதிர்வு சிகிச்சை இருந்து வந்தது.
சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்னால் எதேச்சையாக கண்டறியப்பட்டதே மின்னதிர்வு சிகிச்சை முறை.
நோயாளியை மெல்லிய மின் அதிர்வால் மயக்கமடைய செய்து பின்னர் மீள்பவர்களின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்களை உணர்ந்து, பின்னர் மனநோய்களுக்கான ஒரு முக்கியமான மாற்று சிகிச்சை முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.
தற்போதைய நவீன மருத்துவக் கால கட்டத்திலும், மருந்துகளுக்கு உடனடியாக கட்டுப்படாத, தீவிர மனநோய்களுக்கு, மின்னதிர்வு சிகிச்சை முக்கியத் தேர்வாக பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால், மின்னதிர்வு சிகிச்சை பற்றி பல எதிர்மறை கருத்துகள் நிலவுகின்றன. திரைப்படங்களில் மின்னதிர்வு சிகிச்சையை, கரண்ட் ஷாக் என குறிப்பிடுகிறார்கள். இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
“மின்னதிர்வு சிகிச்சை குறித்து, அது ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் சில மாற்றுக் கருத்துகளும், தவறான புரிதல்களும் இருந்து வருகின்றன. குறிப்பாக, மின்னதிர்வு சிகிச்சை, மனநோயாளிக்கு ஒரு தண்டனையாக வழங்கப்படுவது போலவும், நோயாளி மிகுந்த வேதனைக்கு ஆளாவது போலவும், சிகிச்சைக்குப் பின்னர் அவர் நடைபிணமாக ஆவது போலவும் திரைப்படங்களில் சித்திரிக்கப்படுவதால் பொது மக்களுக்கு வெறுப்பு மன நிலை ஏற்படுத்தப்பட்டு விட்டது. இதனாலேயே மின்னதிர்வு சிகிச்சை என்றாலே, அனைத்து தரப்பு மக்களும், ஏன் சில மருத்துவக் குடும்பத்தை சேர்ந்தவர்களுமே ஒப்புதல் தர தயங்குகிறார்கள்.
இதனால் நோய் தீவிரமடைவதும், குணமடைதல் கால தாமதமாவதுமே ஏற்படுகிறது. உண்மையில் இச்சிகிச்சை முறை மிகுந்த பாதுகாப்பானது, நீண்ட கால பக்கவிளைவுகள் அல்லாததும் இதன் சிறப்பம்சமாகும்.
தீவிர தற்கொலை எண்ணங்கள், மனச்சோர்வு, மன எழுச்சி, மனப்பிறழ்ச்சி மற்றும் மனச்சிதைவு நோய்களிலிருந்து மீட்க இச்சிகிச்சை முறை பயன்படுகிறது. மேலும் கர்ப்பிணிகள், பாலூட்டும் பெண்களுக்கு மனநலக் குறைபாடு ஏற்பட்டாலோ, சில வயதானவர்களுக்கு அதிகம் மருந்துகள் வழங்க இயலாத நிலையில், இச்சிகிச்சை ஒன்றே நோயிலிருந்து மீட்க சிறந்த வழியாகும்.
முதலில் மின்னதிர்வு சிகிச்சை என்பது, வீட்டில் ஓடும் மின்சார அளவை போல பேரதிர்வினை உண்டாக்கும் மிகை மின் அழுத்தம் மூலம் அளிக்கப்படும் சிகிச்சை அல்ல.
ஒரு சராசரி மனிதன் கையால் தொட்டு உணரக் கூடிய அளவிலான மிகச்சிறிய மின்னூட்டமே சில மில்லிசெகண்டுகள் நோயாளிக்கு மயக்க நிலையில் செலுத்தப்படும்.
வித்தியாசம் என்னவெனில், இது நேரடியாக மூளைக்கு செலுத்தப்படுகிறது. அவ்வளவே.
முதலில் மனநோயினால் பாதிக்கப்பட்டவரது நோயின் தீவிரம் மருத்துவரால் பரிசோதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலில் மருந்து சிகிச்சையும், கவுன்சிலிங்கும் தொடங்கப்படும். பின்னர் நோயின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தவும், நோயாளியின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தவும் நோயாளியிடம் ஒப்புதல் பெறப்பட்டு மின்னதிர்வு சிகிச்சை மேற்கொள்ளப்படும்.“ என வைத்தியர் விக்ரம் ராமசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
source;- tamil.thehindu.com