உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்த 'ஆளவந்தான்' திரைப்படத்தை யாராலும் மறந்திருக்க முடியாது.
இந்த படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்தாலும் கமல்ஹாசனின் வித்தியாசமான முயற்சியை ஊடகங்கள் புகழ்ந்தன.
அண்ணன், தம்பி என இரு வேடங்களில் கமல்ஹாசன், மனீஷா கொய்ராலா, ரவீனா தண்டன் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்தை சுரேஷ்கிருஷ்ணா இயக்கியிருந்தார்.
கடந்த 2001ஆம் ஆண்டிலேயே 20 கோடி செலவித் தயாரிக்கப்பட்ட இந்த படத்தின் பட்ஜெட் இன்றைய மதிப்பில் 400 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 'ஆளவந்தான்' திரைப்படத்தை டிஜிட்டல் மயமாக்க கலைப்புலி எஸ்.தாணு முடிவு செய்துள்ளார். இந்த தலைமுறையினர் தவறவிட்ட செய்த இந்த படம் மிக விரைவில் தமிழகம் முழுவதும் 500 திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கலைப்புலி எஸ்.தாணு கூறியுள்ளார்.
இந்த படத்தின் டிஜிட்டல் பணிகள் இன்று ஆரம்பமாகி ஓரிரு வாரங்களில் நிறைவடையும் எனக் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த ஆண்டு கமல்ஹாசனின் 'விஸ்வரூபம் 2' வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் கமல் ரசிகர்களுக்கு மேலும் மகிழ்ச்சியான தகவலாக ஆளவந்தான் டிஜிட்டல் செய்தி வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.