தமிழில் ‘ரெண்டு’ படத்தில் அறிமுகமானபோதே அவருக்கு இருபத்தைந்து வயது. அப்போது பத்தோடு பதினொன்றாக சாதாரணமாகத்தான் பார்க்கப்பட்டார். ‘அருந்ததி’தான் அவரை ஓவர்நைட்டில் தென்னிந்தியாவின் டாப் நடிகைகள் வரிசையில் உயர்த்தியது. பன்னிரெண்டு ஆண்டுகளாக அதே உயரத்தில் வீற்றிருக்கிறார். ‘ருத்ரமாதேவி’, ‘பாகுபலி’ என்று அவர் எடுத்த விஸ்வரூபம் மகத்தானது. இடையில் ‘ஜீரோ சைஸ்’ படத்துக்காக பப்ளிமாஸ் மாதிரி உடலை ஏற்றியவர், இப்போது ‘பாகுமதி’க்காக ஸ்லிம்மாகி இருக்கிறார். வண்ணத்திரை பேட்டிக்காக நேரம் கேட்டபோது மகிழ்ச்சியுடன் சம்மதித்தார் அனுஷ்கா.
‘பாகுமதி’யில் ஆயுதம் ஏந்தி ரத்தக்களரியாக நிற்கிறீர்களே?
சினிமாவில் நடிக்கும் கதாபாத்திரங்களின் தன்மையோடு நடிகையின் நிஜ கேரக்டரை பொருத்திப் பார்க்கக்கூடாது என்பது என் கருத்து. வரலாற்றுப் படங்களில் ராணியாக நடிக்கலாம், இளவரசியாக நடிக்கலாம். அதற்காக நிஜத்தில் ராணியாக அதிகாரம் செய்ய முடியுமா? ‘பாகுமதி’ ஒரு த்ரில்லர் படம். அதில் எனக்கென்ன கேரக்டரோ அதை நல்லாவே செய்திருக்கேன். கேரக்டர்களை கேரக்டராகத்தான் பார்க்கவேண்டும். அனுஷ்காவை அனுஷ்காவாக மட்டுமே பார்க்கவேண்டும்.
முன்ன மாதிரி தமிழ்ப் படங்களில் அதிகம் பார்க்க முடியவில்லையே?
சார், ‘பாகுமதி’யும் தமிழ்ப்படம்தான். ஒவ்வொரு சீனும் தெலுங்கிற்கு தனியாகவும், தமிழுக்கு தனியாகவும் எடுத்தோம். இருந்தாலும் தமிழ் இயக்குநர்கள் படத்தில் நடிக்கவில்லை என்ற கேள்வியாக உங்கள் கேள்வியை எடுத்துக் கொள்கிறேன். நல்ல வாய்ப்புகள் வந்தால் நான் ஏன் நடிக்க மாட்டேன்னு சொல்லப்போறேன். இப்பவும் சில கதைகள் கேட்டிருக்கிறேன். உறுதியானதும் சொல்கிறேன்.
நீங்கள் நடிக்கும் படங்கள் எல்லாமே கமர்ஷியல் படங்கள்தான். ஏன் ஆர்ட் பிலிம், தேசிய விருது பற்றி யோசிக்க மாட்டேங்குறீங்க?
ஆர்ட் பிலிம், கமர்ஷியல் பிலிம்னு நான் பிரிச்சுப் பார்க்கிறதில்லை. அதே மாதிரி விருதுகள் பற்றியும் நான் பெருசா யோசிக்கிறதில்ல. என் முன்னாடி என்ன கதை இருக்கிறது, அதில் என்னுடைய கேரக்டர் என்ன, அந்தக் கேரக்டரை என்னால் செய்ய முடியுமா என்று மட்டும்தான் பார்க்கிறேன். விருது வாங்குவதற்கென்றே படத்தை தேர்வு செய்து நடிக்கமுடியாது. விருதுகள் அதுவா தேடி வரணும்ணா. நாமளா தேடிப்போகக்கூடாது. ‘பாகுபலி’, ஆயிரம் கோடி வசூலித்து சாதனை புரிந்தது. நான் உலகத்துலே எங்க போனாலும் தேவசேனான்னு சொல்லித்தான் என்னை கொண்டாடுறாங்க. இதை விட வேறு என்ன விருது வேணும்?
இருந்தாலும் தேசிய விருது...?
கொடுத்தா வேணாம்னா சொல்லப் போறேன்? அதைப் பற்றியெல்லாம் எனக்கு பெருசா ஐடியா இல்லை.
உங்களுக்கு நயன்தாரா டஃப் காம்பெடிஷன்தானே?
எனக்கு போட்டியாளர்னு யாரும் கிடையாது. எனக்கு நானேதான் போட்டி. இப்படி எதையாவது கேட்டு ஏன் மற்றவங்களுக்கு வருத்தத்தை கொடுக்க நினைக்கிறீங்க?
நயன்தாரா ‘அறம்’ மாதிரி சமூக அக்கறை உள்ள படங்கள்ல நடிக்கிறாங்க. ஹீரோயின் சப்ஜெக்டுல துணிச்சலா நடிக்கிறாங்க. நீங்க?
நான் நயன்தாரா கிடையாது. இருவரையும் தயவுசெய்து ஒப்பிட்டு பிரச்னை பண்ணாதீங்க. சமூக அக்கறை உள்ள சப்ஜெக்ட் கிடைச்சா நான் நடிக்க தயாராத்தான் இருக்கேன். எப்பவுமே கேரக்டரோட சவாலை எதிர்கொள்ளவும், எக்ஸ்பெரிமென்ட் பண்ணிப் பார்க்கவும் நான் ரெடின்னு எல்லாருக்குமே தெரியும். ‘அருந்ததி’, ‘ருத்ரமாதேவி’, ‘பாகுபலி’, ‘ஜீரோ சைஸ்’னு தொடர்ந்து ஹீரோயின் ஓரியண்டட் மூவிஸ் நிறைய பண்ணிட்டேனே!
திடீர்னு குண்டாகுறீங்க. திடீர்னு ஸ்லிம்மாகுறீங்க?
எடையைக் கூட்டுவதும், குறைப்பதும் இன்றைய தேதியில் எல்லோருக்கும் சாத்தியமான ஒன்றுதான். அது உடனடியாக நடந்துவிடாது. கடுமையான பயிற்சி தேவை, உணவுக் கட்டுப்பாடு தேவை. அவ்வளவுதான். இதையெல்லாம் தனித்திறமையாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
அரசியலுக்கு வருவீங்களா தலைவி?
அரசியலுக்கு வருவது அவரவர் விருப்பம். இதில் நான் கருத்து சொல்ல எதுவும் இல்லை. எனக்கு துளியும் விருப்பம் இல்லை. நாட்டு நடப்பு பற்றிகூட அதிகம் தெரியாது. என் நிஜவாழ்வில் நான் பார்க்கிறது மட்டும்தான் எனக்கு தெரியும். கண்முன்னே நடக்கிற சில விஷயங்களே எனக்கு கோபத்தை உண்டு பண்ணுகிறது. எல்லாவற்றையும் தெரிந்து கொண்டால் என்னாவது?
பிரபாஸ்?
அவரைக் காதலிக்கிறேனான்னு கேட்குறீங்க. அதானே? நானும் பிரபாசும், நல்ல நண்பர்கள். அதைத் தாண்டி வேறு எதுவும் இல்லை. நிச்சயமா நான் கல்யாணப் பத்திரிகை தரமாட்டேன். என்னுடைய கணவரை தீர்மானித்துக் கொள்ள எனது பெற்றோர்கள் முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறார்கள். இப்போது எனது பயணம் சினிமாவில் தான். இந்தப் பயணத்தின் ஊடே என் மனசுக்குப் பிடித்த ஒருவரை நான் சந்தித்துவிட்டால் உடனே திருமணம்தான். அதை ரகசியமாக செய்ய மாட்டேன். உங்களுக்கும் சொல்லிவிட்டுத்தான் செய்வேன். எங்கிருந்தாலும் கல்யாணத்துக்கு கட்டாயம் வந்துடணும்