செல்வராகவனின் காதல் படங்கள் அனைத்தும், வழக்கமான காதல் படங்களிலிருந்து சற்று வேறுபட்டது. அவரது படங்களின் நாயகன் காதல் கொண்ட வினோத்தாக இருந்திருப்பான் அல்லது 7ஜி ரெயின்போ காலணியில் குடியிருக்கும் கதிராக இருந்திருப்பான்.
`கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே' என்ற பழமொழியைப் போன்றுதான் செல்வராகவன் படங்களில் வரும் காதல் கதைகள் இருக்கும். ஆனால், இவை அனைத்திலும் இருந்து ஒரு படம் வேறுபட்டு தெலுங்கில் வெளியானது. இந்தப் படத்தின் பெயர் `ஆடவரி மட்டலக்கு அர்த்தலே வெருளி'.
இதனை இயக்கியவர் ஶ்ரீராகவா (எ) செல்வராகவன். இது தமிழில் `யாரடி நீ மோகினி'யாக வெளிவந்தது. செல்வராகவனின் கதைகொண்ட இந்தப் படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கினார். இந்தப் படம் வெளிவந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.
வழக்கமாக செல்வராகவனின் படங்கள் என்றாலே இரவானால், க்ளைமாக்ஸில் அழ வைப்பார் என்றுதான் மனதில் பதிந்திருக்கும். ஆனால், இந்தப் படத்தின் கதையை இரண்டாம் உலகத்தில் தவித்தோ, காதல் கொண்டு தோற்றோ எழுதாமல் தற்பொழுதுள்ள உலகத்தில் உலாவி எழுதியிருக்கின்றார்.
அவர் இயக்கிய எந்தப் படத்தையும், தன்னை முழுமையாக உணர்ந்து திரையில் எவரும் கண்டதில்லை (க்ளைமாக்ஸ் மட்டும்). காதலிக்கும் ஒவ்வொருவனுக்கு இது மாதிரி நடந்துவிடக் கூடாது என்ற பயமும், அழுகையும்தான் க்ளைமாக்ஸில் ஏற்படும்.
ஆனால், இந்தப் படத்திலோ, க்ளைமாக்ஸ் வரை தன்னை தனுஷாகவே நினைத்து ஒவ்வொருவரும் படம் பார்த்திருப்பார்கள். அந்தளவு காதல், குறும்பு, இழப்பு, மீண்டும் காதல், குடும்பம் என எல்லா உணர்வுகளும் கலந்திருக்கும்.
நயன்தாரா எத்தனை படங்களில் அழகாகத் தெரிந்தாலும், முதன் முதலில் அவர் மேல் பித்துப் பிடிக்கச் செய்தது இந்தப் படத்தில்தான்.
`பில்லா' படத்தின் மாடர்ன் ஷோவிலிருந்து, ட்ரெடிஷ்னல் கோமளவள்ளியாக அவதரித்தார். கிணற்றுக்கு அருகில் தங்கச்சி காமெடியில் கலக்குவதாக இருக்கட்டும், காரில் செல்லும்போது `ப்ளீஸ் பொறுத்துக்கங்க, ஐ ஃபீல் பெட்டர்' எனச் சொல்லி, கையைப் பிடிக்கும் காட்சியாக இருக்கட்டும், `போதும் போதும் காதல் போதும்' எனக் கல்யாணத்துக்கு முன் காதலித்தவனை கட்டிப்பிடிப்பதாகட்டும்... அனைத்துக் காட்சிகளிலும் இன்ச் பை இன்ச் நடிப்பில் பிரித்து மேய்ந்திருப்பார்.
ஆண்கள் வெட்கப்படும் தருணத்தை தனுஷ் மட்டுமில்லை, நாங்களும் உங்களைப் பார்த்த பின்புதான் கண்டுகொண்டோம். எனக்குத் தெரிந்து செல்வராகவனின் கதைகளில் வலியைத் தள்ளிவைத்துவிட்டு, ஆனந்தக் கண்ணீரில் அழவைத்த காட்சி அதுவாகத்தான் இருந்திருக்கும். ஏனென்றால் காதலிக்கும் ஒவ்வொரு ரோமியோக்களும் அந்தக் காட்சியில் அவர்களது ஜூலியட்டை உணர்ந்திருப்பார்கள்.
படத்தின் மற்றொரு சிறப்பம்சம், கதாபாத்திர வடிவமைப்பு. இரண்டு நிமிடம் வந்துபோகும் சிறுவனிலிருந்து, படம் முழுக்க வந்துபோகும் கதாநாயகன் வரை எல்லாமே செம.
அதிலும் முதல் பாதியில் இடம்பெற்ற கருணாஸின் காமெடிகள் சிறப்பு. முக்கியமாக டெலிஃபோன் பூத்தில் இருவரும் செய்யும் அலப்பறைகளை எத்தனை முறை பார்த்தாலும் சிரிப்பு வரும். இரண்டாம் பாதியில் அவர் விட்ட இடத்தை அழகாக நிரப்பியிருப்பார் ஆனந்தவள்ளி, ஸாரி ஸாரி பூஜா. தன் குறும்புத்தன நடிப்பின் மூலமும், அழகான ரியாக்ஷன்ஸ் மூலமும் நயன்தாராவைவிட அழகாகத் தெரிந்தார்.
ஸாரி நயன்தாரா, உங்களைவிட அவங்க அழகாதான் இருந்தாங்க. படத்தில் ஃபேமிலி போர்ஷன் மிகக் குறைவு. ஆனால், காதலைவிட அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது ஃபேமிலி போர்ஷன்தான். அதற்குக் காரணம் ரகுவரன். எதிர்பாராத விதமாக இந்தப் படம்தான் இவரது கடைசிப் படமும்கூட. அம்மாவை இழந்த தன் மகனிடம் அவர் காட்டும், அவருக்குத் தெரியாமல் காட்டும் அக்கறை, தன் மகனின் காதலுக்கு தூது செல்வது, `எந்த நாயும் எனக்குக் கஞ்சி ஊத்த வேண்டாம்' என்று கடைசிக் காலத்தில் கூட தன் சொந்தக் காலில் நிற்கும் தன்னம்பிக்கை எனப் படத்தில் கொஞ்சம் நேரம் வந்தாலும் அப்பா - மகனுக்குள் இருக்கும் அனைத்து உணர்வுகளையும் கொடுத்துவிட்டுப் போயிருப்பார்.
ஒருவரைப் பற்றி பேசாமல் இந்தக் கட்டுரை முற்றுப்பெறாது. அவர்தான் யுவன். எத்தனை முறை இவரைப் பற்றிச் சொன்னாலும் முதல் முறை சொல்வது போல் ஒரு ஃபீலிங். பார்க்கும் ஒவ்வொரு காட்சிகளையும் நம்பகத்தன்மையாக மாற்றியது யுவனின் இசை.
நாயகன் அவனது நாயகியைப் பார்த்த முதல் சந்திப்பில் ஆரம்பித்து, க்ளைமாக்ஸில் அவளே கட்டுப்பாட்டை இழந்து கட்டிப்பிடித்து முத்தமிடும் காட்சி வரை இசையில் மிரட்டியிருப்பார். `பிடிக்கும் ஆனா பிடிக்காது' என்ற காதல் விளையாட்டை விளையாடுவதில் பெண்கள் பெயர் பெற்றவர்கள். அதை அவ்வளவு அழகாக வெளிக்காட்டியிருக்கும் ஒரு படம்தான் இது.
நன்றி – விகடன்