“முள்ளும் மலரும்“ மாதிரியான படங்களில் விஜய் நடிக்க வேண்டும் என கமல்ஹாசன் செவ்வி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
தனது அரசியல் பிரவேசம் குறித்து பல்வேறு தொலைக்காட்சிகளுக்கு செவ்வியளித்துள்ள கமல். அதில் பல்வேறு கருத்துக்களை
வெளிப்படுத்தியிருந்தார். விஜய்யை பற்றிய தனது பார்வையையும் வெளிப்படுத்தியுள்ளார் கமல்.
அரசியலில் ஈடுபட்டு விஜய் யாரை ஆதரிக்கப்போகிறார் என்பது அவரது தனிப்பட்ட முடிவு. அவரது கொள்கையையும் அவரே தீர்மானிக்க முடியும். அவரது அரசியல் பார்வை எங்களுடைய பார்வையுடன் ஒத்துப்போனால் நாங்கள் அவரை ஆதரிப்போம்.
அவரது தேர்வு எங்கள் கொள்கையும் ஒத்துப்போகவில்லை என்றால் நிச்சயமாக அவரை விமர்சிப்போம்.
நான் நிறைய விஜய் படங்களைப் பார்த்திருக்கிறேன். ரஜினிகாந்த் படங்களிலேயே என்னை மிகவும் கவர்ந்தது 'முள்ளும் மலரும்' படம் தான். ஆனால், இப்படம் எத்தனை ரஜினி ரசிகர்களுக்குப் பிடிக்கும் என எனக்குத் தெரியாது. ரஜினியின் 'முள்ளும் மலரும்' போன்ற படங்களில் விஜய்யும் நடிக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். ஒரு கலைஞனாக நல்ல நடிகர்கள் நல்ல கதைகளில் நடிக்க வேண்டும் என விரும்புகிறேன்.
என்னிடம் நிறைய விஜய் படங்கள் இருக்கின்றன. அவை எல்லாமே பெரும் வெற்றிப்படங்கள் என்பதில் ஐயமில்லை. இருந்தாலும் 'முள்ளும் மலரும்' போன்ற படங்களில் விஜய் நடிக்க வேண்டும். எனது இந்த ஆசை ஒரு நடிகனுக்கே உரித்தான சுயநலம். பொலிவுட்டில் ஆமீர் கான், ஷாருக்கான் போன்ற நடிகர்கள் அத்தகைய கதைகளைத் தேர்வு செய்து நடிக்கின்றனர்.
நான்கூட, 'சகலாகலா வல்லவன்' படம் நடித்த அதே வருடத்தில் 'மூன்றாம் பிறை' படத்தில் நடித்தேன். விஜய்கூட அதேமாதிரி நடிக்க முடியும் என நான் நம்புகிறேன். அத்தகைய படங்களில் நடிக்கும் திறமை விஜய்யிடம் இருக்கிறது என எனக்குத் தெரியும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.