ஆர்ஜெண்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரரான லயனல் மெஸ்ஸி, தனது குழந்தை பருவ தோழியை திருமணம் செய்துகொண்டார்.
அவரது சொந்த ஊரில் நடந்த இத்திருமணம் ''நூற்றாண்டின் திருமணம்'' என வர்ணிக்கப்படுகிறது.
30 வயதான லயனல் மெஸ்ஸிக்கும் அவரது பால்யத் தோழி, 29 வயதான ஆண்டோனெல்லா ரொக்குசோவுக்கும் இடையிலான திருமண விழா ரொசாரியோவில் உள்ள ஒரு ஆடம்பர ஹோட்டலில் நடந்தது.
கால்பந்து நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் என 260 விருந்தினர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வுக்காக, நூற்றுக்கணக்கான பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அர்ஜெண்டினா மற்றும் பார்சிலோனா கால்பந்து கிளப் அணியின் மெஸ்லி, தனது 13வது வயதில் ஸ்பெயினுக்கு குடியேறுவதற்கு முன்பாக ஆண்டோனெல்லா ரொக்குசோவை முதன் முதலாகச் சந்தித்தார்.
வெள்ளிக்கிழமை நடந்த திருமண நிகழ்வில், மெஸ்ஸியின் பார்சிலோனா அணியின் சகவீரர்களான லூயிஸ் சுராஸ், நெய்மர், ஜெரார்டு பிக் மற்றும் அவரது மனைவியும் பிரபல பாப் பாடகியுமான ஷகிரா ஆகியோர் கலந்துகொண்டனர். பல விருந்தினர்கள் திருமணத்தில் கலந்து கொள்ள தனி விமானங்களில் சென்றனர்.
''இந்த ஆண்டின் திருமணம்'' மற்றும் ''இந்த நூற்றாண்டின் திருமணம்'' என்று அர்ஜெண்டினாவிலிருந்து வெளிவரும் கிளரின் பத்திரிகை இத்திருமணத்தை வர்ணித்துள்ளனது.
முன்னதாக, பிரபலமான விருந்தினர்களை பார்க்க உள்ளூர் மக்கள் விமான நிலையத்தில் கூடினர்.
அழைப்பு இல்லாத விருந்தாளிகளை ஹோட்டலுக்கு வெளியிலே தடுத்து நிறுத்தும் பணியினை ஒரு தனியார் பாதுகாப்பு நிறுவனம் செய்துகொண்டிருந்தது.
பத்திரிக்கையாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்குச் செல்வதற்கான அனுமதியினை 150 பத்திரிக்கையாளர்கள் பெற்றிருந்தனர்.
ஆனால், திருமண நிகழ்வின் அனைத்து இடங்களுக்குச் செல்ல அவர்களுக்கு அனுமதி தரவில்லை என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.