ஸ்ரீலங்கா சுகந்திர கட்சியின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான K.T.இராஜசிங்கம் மற்றும் நோர்வேயில் வசிக்கும் கமல் ஏற்பாட்டில் வரும் ஜூலை மாதம் யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இதில் சிறப்பு அழைப்பாளராக இசைஞானி இளையராஜா கலந்து கொள்ளவுள்ளதாகவும் அவருடன் பாடகர் மனோ, சித்திரா, சாதனாசர்க்கம், காத்திக் மற்றும் ஹரிச்சரன் ஆகியோரும் கலந்தவுள்ளதாக தெரியவருகின்றது.
எனினும் புலம்பெயர் தமிழர்கள் மற்றும் இலங்கையில் உள்ள தமிழர்கள் சிலர் ஒன்றிணைந்து அவரது வருகைக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையை எதிர்த்தும் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பை நடத்தக் கோரியும் தமிழர்கள் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் அதைக் கருத்தில் கொள்ளாமல் ஸ்ரீலங்கா உலகை எமாற்றும் நல்லிணக்கம் என்ற போர்வைக்குள் இருந்துகொண்டு இசை நிகழ்வு நடத்துகின்றது.
இந்நிகழ்விற்கு நீங்கள் பங்கு பெற கூடாது என்பது உலகதமிழர்களின் வேண்டுகோள்.
நீங்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டால் இலட்சக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்று குவித்த கொலைகார இலங்கை அரசுக்கு ஆதரவு தெரிவித்தது போலாகிறது. எனவே உலகதமிழர்களின் வேண்டுகோளுக்கு மதிப்பளித்து இந் நிகழ்வை புறக்கணிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ஸ்ரீலங்காவின் ஆட்சியாளர்களும், அரசியலில் செல்வாக்கு மிக்கவர்களான மேட்டுக்குடியினரும், மகாவம்ச மனோபாவத்திலிருந்து விடுபடும்வரை இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் ஏற்படப்போவதில்லை. வடகிழக்கு காணிகளை விடுவிக்க கோரி இரவு பகலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காணாமல் போனவர்களின் உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நீங்கள் இலங்கை சென்று இசை நிகழ்வு நடத்துவது தமிழர்களின் போராட்டங்களை கொச்சப்படுத்துவதாக அமையும்.
எனவே உலகத்தமிழார்களின் உறவுக்கு மதிப்பளித்து இந் நிகழ்வை இரத்து செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.“ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.