ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் 'காலா', 2018ஆம் ஆண்டின் தமிழ்ப் புத்தாண்டுக்கு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை படப்பிடிப்பைத் தொடர்ந்து, 'காலா' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் படுவேகமாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு மாதத்தில் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு முடிவு செய்துள்ளது.
'காலா' படத்திற்கு முன்பாக '2.0' படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருவதால், 'காலா' வெளியீடு எப்போது என்ற கேள்வி எழுந்தது. இது குறித்து படக்குழுவினரிடம் விசாரித்த போது, "சென்னை படப்பிடிப்பு முடிந்தவுடன், ரஜினியின்றி சிறுபகுதி மும்பை படப்பிடிப்பு இருக்கிறது. அதனைத் தொடர்ந்து இறுதிகட்டப் பணிகள் தொடங்கப்படும். அடுத்தாண்டு தமிழ் புத்தாண்டு வெளியீடாக இருக்க வாய்ப்புகள் அதிகம்" என்று தெரிவித்தார்கள்.
ஈஸ்வரி ராவ், ஹியூமா குரேஷி, நானா படேகர், அஞ்சலி பட்டீல், சமுத்திரக்கனி, அருள்தாஸ் உள்ளிட்ட பலர் ரஜினியோடு நடித்து வரும் இப்படத்தை தனுஷ் தயாரித்து வருகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.