lan sinlan eng

வசதிகள்

மன அழுத்தம் ஏன் ஏற்படுகிறது?

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

உலகிலேயே மன அழுத்தம் உள்ளவர்கள் அதிகமாக வாழும் நாடு இந்தியாவாகும்.  2015ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 100 பேரில் 20 பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.  

இந்தியாவில் தற்கொலை செய்துகொள்பவர்களில் 50 வீதமானவர்கள்  அதிகமானோர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

மன அழுத்தமானது தனிப்பட்ட ஒரு மனிதரின் மன நலப் பிரச்சினை என்று கடந்து செல்ல முடியாது. இந்தப் பாதிப்பின் ஆரம்பகட்டத்தில் குடும்ப வேலை, அலுவலக வேலை போன்ற சாதாரண வாழ்வியல் கடமைகளை நிறைவேற்ற முடியாமல் திணறுவார்கள்.

ஆனால், காலப்போக்கில் உடல் நலம் குறைவதும், உறவுகள் சிதைவதும், ஒட்டு மொத்த சமூகமே எதிரியாவதும் தவிர்க்க முடியாத தாகிவிடும். நாட்கள் செல்ல மன அழுத்தம் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியையே சீர்குலைத்து விடுகிற ஆபத்து நிறைந்தது என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும்.

மன அழுத்தம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் மருத்துவர்களையும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களையும் அறிவுறுத்திவருகிறது.

மக்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதற்கு இன்றைய இயந்திரமயமான வாழ்க்கைமுறை, சிதைந்துபோன உறவுமுறை, மறைந்துபோன கூட்டுக் குடும்ப மகிழ்ச்சி, அதிகரித்துவரும் மதுப் பழக்கம், தன் வேலை, தன் வீடு எனும் குறுகிய மனப்பான்மையின் வளர்ச்சி இப்படிப் பொதுவான பல காரணங்களைக் கூற முடியும்.

குறிப்பிட்டுச் சொன்னால், குழந்தைப் பருவத்தில் ஏற்படுகிற மனக்காயங்கள், இளவயதினருக்குக் காதல் தோல்வி, வேலையின்மை அல்லது படிப்புக்கு ஏற்ற வேலையில்லாதது போன்றவை காரணமாகின்றன. வேலைக்குச் செல்பவர்களுக்கு அதிக வேலைப் பளு, குறைந்த சம்பளம், மோசமான பணிச் சூழல் போன்ற காரணங்களால் மன அழுத்தம் ஏற்படுகிறது.

பெண்களுக்கோ தாமதமாகும் திருமணம், குடிகாரக் கணவர், குழந்தையின்மை, அடங்காத பிள்ளைகள் என்று பல பிரச்சினைகள் மன அழுத்தத்தைக் கொண்டுவருகின்றன. முதியவர்கள் தனிமை, வெறுமை, இழப்பு, பொருளாதார நெருக்கடி, நாள்பட்ட நோய்நிலை, நலிந்துவரும் உடல் நிலை போன்றவற்றால் மன அழுத்தம் வந்து அவதிப்படுகிறார்கள்.

பொதுவாக, மன அழுத்தம் அதிகமாகும்போது அது உடல்நலனையும் பல வழிகளில் பாதிக்கும். உடல் இளைப்பது, அஜீரணம், இரைப்பைப் புண், ஒற்றைத் தலைவலி, டென்ஷன் தலைவலி, காரணம் தெரியாத உடல் வலி, மனப் பதற்றம், மன பயம், குடல் எரிச்சல் நோய், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, மாரடைப்பு, ஆஸ்துமா, தூக்கமின்மை, ஆண்மைக் குறைவு, பாலியல் ஆர்வம் குறைவது போன்ற பல தொல்லைகளுக்கு மன அழுத்தம் வழிவிடும்.

குறுகிய கால மன அழுத்தம் குறித்துப் பயம்கொள்ளத் தேவையில்லை. ஆனால், நாள்பட்ட மன அழுத்தத்தின் விளைவுகள் ஆபத்தானவை. அதிகமுறை மன அழுத்தத்துக்கு ஆளாகிறவர்களை மீண்டும் அமைதிநிலைக்குக் கொண்டுவருவது கடினம் இவர்கள் தனக்குத்தானே பேசிக்கொள்வதும், மற்றவர்களிடமிருந்து விலகியே இருப்பதும், தனிமையை நாடுவதும், குடிப்பழக்கம் மற்றும் போதைப் பழக்கத்துக்கு அடிமையாவதும் உண்டு.

தன்னைப் பற்றி, எதிர்காலத்தைப் பற்றி, சமூகத்தைப் பற்றி எதிர்மறையான எண்ணங்கள் தோன்றுவது, வீட்டைவிட்டு ஓடிப்போவது, சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவது, தற்கொலை செய்துகொள்ள முயற்சிப்பது போன்றவற்றுக்கு மன அழுத்தம்தான் முக்கியக் காரணமாக இருக்கிறது.

பசி குறைவது அல்லது அதிக பசி, அடிக்கடி கோபப்படுவது எரிச்சல்படுவது, உறக்கம் குறைவது, பேச்சு, செயல்களில் வேகம் குறைவது, எதிலும் ஆர்வமில்லாமல் இருப்பது, முக்கியமானவற்றில் முடிவெடுக்க முடியாத நிலைமை, தன்னம்பிக்கை இல்லாமல் பேசுவது, பாதுகாப்பற்ற உணர்வு, ஞாபக மறதி, பதற்றமான எண்ணங்கள், மனக் குழப்பம் போன்றவை மன அழுத்த நோயின் முக்கியமான அறிகுறிகள் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

The Hindhu (Tamil)

Face Book Setup 01

 

Back to top
Go to bottom

பிரபலமான செய்தி