மத்திய காலத்தில் தாராண்மக் கலை (liberal arts), இயந்திரம்சார் கலை (mechanical arts) என்ற வகைப்பாடு இருந்தது. எனினும் அக்காலத்தில் கலை என்பதில், இன்று அறிவியல், வேளாண்மை, பொறியியல் போன்ற துறைகளைச் சார்ந்த விடயங்களும் அடங்கியிருந்தன. தற்காலத்தில் நுண் கலைகள், பயன்படு கலைகள் என்ற வகைப்பாடு உள்ளது. தற்காலத்தில் மனித ஆக்கத்திறனின் வெளிப்பாடே கலை என்று வரைவிலக்கணம் கூறுகின்றனர். 20 ஆம் நூற்றாண்டில் பெரும்பாலும் கலைகளை ஒன்பதாக வகுத்தனர். கட்டிடக்கலை, நடனம், சிற்பம், இசை, ஓவியம், கவிதை, திரைப்படம், ஒளிப்படவியல், வரைகதை என்பன இவை.
பெரும்பாலோர், சிறப்பாக மேலை நாட்டினர், கலை வரலாறு, ஐரோப்பியக் கலை வரலாற்றையே குறிப்பதாகக் கருதி வந்தனர். எனினும் கலை வரலாறு என்பது கற்கால மனிதர்களின் கலைகள் தொடக்கம், உலகின் பல நாகரீகங்களின் கலை வரலாற்றையும் உள்ளடக்குகின்றது.