இலங்கையில் தமிழ் கலைத்துறையைப் பொறுத்தவரையில் இளம் கலைஞர்கள் உருவாகினாலும் அவர்களுக்கான வாய்ப்பு கிடைக்கப்பெறுவதிலும் அதனைத் தக்கவைத்துக்கொள்வதிலும் பல்வேறு சவால்கள் நிறைந்திருக்கின்றன. அவற்றை தாண்டி தனக்கென தனிவழியை அமைத்துக்கொள்வதில் இன்று இளம் பராயத்தினர் சமூக வலைத்தளங்களிலே மிகச் சிறப்பாக இயங்கி வருகின்றனர்.
அந்த வகையில் கலைத்துறையில் பல்வேறு பரிணாமங்களில் காலடி எடுத்து வைத்து மெல்ல மெல்ல முன்னேறிக்கொண்டிருக்கும் இளம் கலைஞர் சந்திரமோகன் ரோஹ{ல் அபிநாத். புகைப்படம்இ காணொளித் துறைஇ எழுத்துஇ நடிப்புஇ இயக்கம்இ இசை என ஆர்வமுள்ள அனைத்துத் துறைகளிலும் தன்னை மெருகேற்றி வரும் அவரை நாம் சந்தித்தோம்.
உங்களைப் பற்றி சிறு அறிமுகம் தாருங்கள்?
எனது சொந்த ஊர் இறக்குவானை. பரியோவான் தமிழ் கல்லூரியின் பழைய மாணவன். கலைத்துறையில் சாதித்து எனது மண்ணுக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என சிறு வயது முதல் ஆர்வம் கொண்டிருக்கிறேன். கொழும்பில் தனியார் வங்கியொன்றில் கடமையாற்றிக்கொண்டிருந்தாலும் பெரும்பாலும் பாடல்இ இசைஇ எழுத்துஇ நடிப்பு என நேரத்தைக் கழிக்கிறேன். அத்துடன் நிபுணத்துவமிக்க ஆசிரியரிடம் முறைப்படி சங்கீதத்தைப் பயின்று வருகிறேன்.
இந்தத் துறையில் காலடி எடுத்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் எவ்வாறு உண்டாது?
சிறு வயது முதல் ஆர்வம் இருந்தபோதிலும்இ 2015 ஆம் ஆண்டு ஓர் ஆங்கலப் பாடல் தழுவியதாக ஒரு பாடலை முயற்சி செய்து பார்த்தேன். அது பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்தே இந்தத் துறையில் தொடர்ந்தும் பயணிக்க எண்ணினேன்.
தனியார் துறையில் தொழில்புரிந்துகொண்டு இந்தத் துறையில் நேரம் ஒதுக்கி செயற்பட முடிகிறதா?
நேரத்தை நான் உருவாக்கிக்கொள்கிறேன். தொழில் முக்கியம். ஏனென்றால் இலங்கையில் தமிழ் கலைத்துறையைப் பொறுத்தவரையில் அதில் வருமானம் ஈட்டுவது என்பது மிகக் கடினமானது. ஆதலால் தொழில் செய்துகொண்டு எனக்குக் கிடைக்கும் எல்லா நேரங்களிலும் எனது படைப்புகள் தொடர்பாகவே செயற்பட்டுக்கொண்டிருக்கிறேன்.
இலங்கையின் முன்னணி கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு எவ்வாறு கிட்டியது?
எனது பாடல்கள் மற்றும் குறும்படங்களைப் பார்த்து அண்ணன்மார் என்னை அழைத்துக் கதைத்தார்கள். அவர்களுடைய அனுபவங்களின் வாயிலான விமர்சனங்களைத் தந்தார்கள். அதனூடாக எனக்குப் பல்வேறு வாய்ப்புகள் கிடைத்தன. குறிப்பாக உள்நாட்டுக் கலைஞர்களை இணைத்து ஹிப்பொப் பாடல்களுடன் கொழும்பில் நடத்தப்பட்ட மாபெரும் இசை நிகழ்ச்சியில் பாடக்கிடைத்தமை பெரும் வரப்பிரசாதமாகவே பார்க்கிறேன்.
இப்போது இந்தத் துறையில் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?
இயக்குநரின் கனவு ஒன்றை மையப்படுத்தி த்ரில் குறும்படம் ஒன்றில் நடித்துக்கொண்டிருக்கிறேன். அதில் உதவி இயக்குநராகவும் பணியாற்றுகிறேன். மற்றும்இ பாடல் ஒன்றுக்கான படப்பிடிப்பு ஏற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.
அண்மையில் நீங்கள் பணியாற்றி வெளிவந்த படைப்பு எது?
கிறேசி தமிழன் தயாரிப்பில்இ சி.வி.லக்ஷின் வரிகளில் சங்கர் புஷ்பராஜ் இயக்கிய சிஎம்பி கர்ள்பிரண்ட் பாடல் கடந்த டிசம்பரில் வெளியானது. அதில் உதவி இயக்குநராகப் பணியாற்றினேன். சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் அந்தப்பாடல் பெரிதும் பேசப்பட்டது. அந்தப் பாடலுக்கு பணியாற்றுகையில்இ என்னை வளர்த்துவிட ஆவலாக உள்ள பலரும் எனக்கு உந்துசக்தியாக இருந்தார்கள்.
உங்களுடைய கலைத்துறைப் பயணத்துக்கு யாருடைய ஒத்துழைப்பு அதிகமாக இருக்கிறது? வீட்டாரின் பங்களிப்பு என்ன?
வீட்டில் ஆரம்பத்தில் எதிர்ப்பு இருந்தபோதிலும்இ பின்பு ஒத்துழைப்பு தருகிறார்கள். குறிப்பாக என்னுடைய மாமாமார் எனக்குப் பக்கபலமாக இருக்கிறார்கள். மற்றும்இ இத்துறையில் நான் முன்னேறுவதற்கு நண்பர்கள்தான் காரணம். அவர்கள் என்னை எப்போதும் ஊக்கப்படுத்தி என்னுடன் பயணிக்கவே விரும்புகிறார்கள். அத்துடன் சங்கீதம்இ பாடல்இ குறும்படங்களில் சாதித்துவரும் இளம் கலைஞர்கள் எனக்குப் பக்கபலமாக இருக்கிறார்கள்.
நீங்கள் எதிர்நோக்கும் சவால்கள் என்ன?
இங்கே எதிர்மறையாக விமர்சனம் செய்பவர்கள் தான் பலர் இருக்கிறார்கள். உங்களால் முடியாதுஇ இது சரிவராது என்று சொல்லக்கூடிய பலரை நான் கண்டிருக்கிறேன். இன்னும் முயற்சி செய்து முன்Nனுறுங்கள் என்று உற்சாகப்படுத்துபவர்கள் ஒரு சிலர்தான் இருக்கிறார்கள். தர லோக்கல் கொழும்பு மச்சான் என்ற எமது படைப்பில் எங்களை தாழ்மைப்படுத்தும் கருத்துகளைக் கேட்டு ஆதங்கப்பட்டேன். தென்னிந்திய சினிமாவைப் பார்த்து அந்த அளவுக்கே நமது படைப்பும் இருக்க வேண்டும் என எண்ண முடியாது. அவ்வாறு தரமான படைப்புகள் வெளிவருகின்றன. ஆனால் எம்மவருக்கு இந்திய சினிமாவில்தானே மோகம் அதிகம்?
ஆயினும் நான் தொடர்ந்து பயணிக்கவே ஆசைப்படுகிறேன்.
உள்நாட்டுக் கலைஞர் என்ற வகையில் ஊடகங்களின் பாத்திரத்தை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?
ஊடகங்கள் இல்லாவிட்டால் எமது எதிர்காலம் கேள்விக்குறிதான். ஆனால் ஒருசில ஊடகங்களைத் தவிர ஏனையை உள்ளுர் கலைஞர்களுக்கான முக்கியத்துவத்தைக் கொடுப்பதில்லை. இன்று சிங்கள சினிமாவின் வளர்ச்சியைப் பார்த்தால் அதற்கு முக்கிய காரணமே சிங்கள ஊடகங்கள் தான். ஆனால் நாம் இந்திய சினிமாவிலேயே தங்கியிருக்கும் துர்பாக்கிய சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஊடகங்கள் சரியான வாய்ப்பினை வழங்கினால் எமது துறை மேலும் முன்னேற்றமடைந்து கலைஞர்களுக்கு வருவாய் மூலமாகவும் அமையும் என்பதில் சந்தேகமில்லை.
உங்களுடைய படைப்புகளுக்கு சமூக வலைத்தளங்களில் கிடைக்கும் வரவேற்பு எவ்வாறு இருக்கிறது?
எமது படைப்புகளை சமூக வலைத்தளங்கள் வாயிலாகவே நாம் வெளியிட்டு வருகிறோம். அதற்கு பெரும் வரவேற்பு கிடைக்கிறது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் பல்வேறு கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெறுகின்றன. இருவழித் தொடர்பாடல் முறை என்பதால் படைப்பாளிகளுக்கும் மக்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு ஏற்படுகிறது. ஆதலால் நேரடியாக எனக்குக் கிடைக்கும் காத்திரமான விமர்சனங்களை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
உங்களுடைய இலட்சியம் என்ன?
இலங்கையில் யாருமே செய்திராத அளவுக்கு நல்ல படைப்புகளை வெளிக்கொண்டு வர வேண்டும். அந்தப் படைப்புகள் உலகம் முழுவதும் பேசப்பட வேண்டும். நான் பிறந்த மண்ணுக்கும் எனது தாய்நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் முன்னேற வேண்டும் என்பதே எனது இலட்சியமாகும்.
சிங்கள மொழித் திரைப்படம் ஒன்றில் உத்தியோகபூர்வ புகைப்படக் கலைஞராக பணியாற்றிக்கொண்டிருக்கிறேன். எனக்கு அந்தத் துறையிலும் சந்தர்ப்பம் கிடைக்குமானால் நிச்சயமாக சாதிப்பேன்.
-சந்திப்பு: என். இராமானுஜம்-