மெர்சல் படத்துக்கு வழங்கப்பட்ட தணிக்கைச் சான்றிதழை திரும்பப் பெறக்கோரி சட்டத்தரணி அஸ்வத்தமன் தொடர்ந்த பொது நல வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
மெர்சல் படத்துக்கு ஒரே நாளில் தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்று மனுதாரர் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் பொது நல அக்கறை இருந்தால் திரைப்படத்தில் குடிப்பது போன்ற காட்சிகளுக்குத் தடை கோருவதற்கு வரலாம். மாற்றுத்திறனாளிகள் தவறாக சித்தரிப்பதை எதிர்த்து வரலாம். ஆனால் வரவில்லை. இது போன்றவற்றுக்கு எதற்காக வருகிறீர்கள்?
மெர்சல் படத்துக்கு எதிராக இது போல் எத்தனை வழக்குகள் தொடரப்பட்டுள்ளன? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் இந்தப் படத்தில் என்ன தவறு உள்ளது என்பதைக் கூறுங்கள், அது எவ்வாறு மக்களை பாதிக்கிறது என்பதைக் கூறுங்கள் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த மனுதாரர், "டிஜிட்டல் இந்தியா திட்டத்தை இந்தப்படத்தில் விமர்சிக்கிறார்கள். இந்தியாவில் பணம் இல்லை என நடிகர் வடிவேலு பேசுகிறார். வைத்தியத்துறை குறித்து தவறாக தகவல்களைக் கொடுக்கிறார்" என்றார்.
அப்போது குறிக்கிட்ட நீதிபதிகள் இந்தியாவில் எவ்வளவு பேருக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது தெரியுமா? என்று கேள்வி எழுப்பினர். பண மதிப்பிழப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர், அரசியல் தலைவர்கள் விமர்சித்து இருக்கின்றனரே. அவர்கள் மீது வழக்கு போடப்பட்டதா ? என்று கேள்வி எழுப்பினர்.
"இது வெறும் திரைப்படம் தானே, இது நிஜ வாழ்க்கை கிடையாதே, அதை ஏன் நிஜம்போன்று விமர்சிக்கிறீர்கள், இந்தப் படம் சொல்லும் அளவுக்கு நல்ல படம் இல்லை, ஆனால் இதுபோன்ற விமர்சனம் மற்றும் எதிர்ப்புகளால் அப்படம் வெற்றிகரமாக ஓடுகிறது" என்று தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த மனுதாரர் "டிஜிட்டல் இந்தியா திட்டத்தால் மக்களிடம் பணம் இல்லை என வசனம் உள்ளது. இது தவறானது" என்று தெரிவித்தார்.
அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், "மதுபானக் கடைகளை மூடுவது, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான கொடுமை, நல்ல கல்வி தொடர்பாக பொது நல வழக்குகள் தொடருங்கள். நாட்டுக்குத் தேவையான இயக்கங்களை நடத்துங்கள். ஏன் ஒரு படத்தை மட்டும் குறிவைத்து சொல்கிறீர்கள்? நீதிமன்றத்தை பொது மேடையாக்க வேண்டாம்" என்று தெரிவித்தனர்.
......