என்ன பிரச்சினை வந்தாலும் சமாளித்து தீபாவளிக்கு மெர்சளை வெளியிடுவோம் என படத்தின் தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி தெரிவித்திருக்கிறார்.
அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், வடிவேலு, கோவை சரளா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மெர்சல்'. தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள 100ஆவது படம் இதுவாகும்.
இப்படம் தொடர்பாக தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி அளித்துள்ள செவ்வியில் “'மெர்சல்' ஒரு மேஜிக்கலான படம். விஜய் சாருடைய மேஜிக், ஏ.ஆர்.ரஹ்மான் சாருடைய இசை மேஜிக் இவைப் போக சின்ன குழந்தைகள் ரசிக்கக் கூடிய வகையிலான மேஜிக்கும் இருக்கிறது. தீபாவளி பண்டிகைக்கு குடும்பத்துடன் பார்க்கக் கூடியளவுக்கு பிரமாதமாக வந்திருக்கிறது. 'மெர்சல்' எங்களுடைய 100ஆவது தயாரிப்பாக அமைந்திருப்பதில் மகிழ்ச்சி.
'மெர்சல்' முழுப்படத்தையும் பார்த்துவிட்டு விஜய் சார் சந்தோஷப்பட்டார். அட்லி நல்ல கதை வைத்திருக்கிறார் என்றவுடன் அவரைத் தேர்வு செய்தோம். ஏ.ஆர்.ரஹ்மான்தான் இசை என்று அட்லி விரும்பினார். ஆகையால் கேட்டோம். உடனே ஒப்புக் கொண்டார். அதுவே பெரிய விஷயம். இப்படத்தில் நித்யாமேனன் கதாபாத்திரம் மிகவும் பேசப்படும். வலுவான பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் இன்னும் நிறைய பெயர் கிடைக்கும்.
ஒரு படத்தை தயாரிக்கும் போது, அதை சரியாக வெளியிட்டுவிட வேண்டும் என்பதுதான் முதல் நோக்கமே. என்ன பிரச்சினை வந்தாலும் அதை சமாளித்து வெளியிடுவோம். ஏனென்றால் அதை சரியாக கொண்டு போய் மக்களிடம் கொடுத்தால் மட்டுமே எங்களுடைய பணி முடிவடைகிறது. ஏனென்றால் திரைத்துறை நண்பர்கள் பலரும் எங்களுக்காக பணிபுரிந்து வருகிறார்கள். அதனால் மட்டுமே உறுதியாக தீபாவளி வெளியீடு என்று கூறிக் கொண்டே இருக்கிறோம்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.