விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ஆடவர் ஒற்றையர் பிரிவில் அன்டி மரே ஜோகோவிச் ஆகியோர் வெளியேறி உள்ளதால் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் பட்டம் வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் உருவாகி உள்ளன.
லண்டனில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் ஆம் நிலை வீரரான சுவிட்ஸர்லாந்தின் ரோஜர் பெடரர், 6ஆம் நிலை வீரரான கனடாவின் மிலோஸ் ரயோனிச்சை எதிர்த்து விளையாடினார். இதில் பெடரர் 6-4, 6-2, 7-6 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.
பெடரருக்கு இது விம்பிள்டனில் 100ஆவது ஆட்டமாக அமைந்தது. 35 வயதான அவர் விம்பிள்டன் தொடரில் 12ஆவது முறையாக அரை இறுதிக்கு முன்னேறி உள்ளார்.
இதன் மூலம் அதிக வயதில் அரை இறுதிக்கு முன்னேறிய 2ஆவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன்னர் 1974ஆம் ஆண்டு 39 வயதில் அவுஸ்திரேலியாவின் கென் ரோஸ்வால் அரை இறுதிக்கு தகுதி பெற்றிருந்தார்.
அரை இறுதியில் பெடரர், 11ஆம் நிலை வீரரான செக் குடியரசின் தாமஸ் பெர்டிச்சுடன் மோத உள்ளார். 8ஆவது முறையாக விம்பிள்டனில் பட்டம் வெல்லும் கனவுடன் உள்ள பெடரருக்கு இம்முறை அது சாத்தியப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
டென்னிஸ் உலகில் பெடரரின் பரம வைரிகளாக கருதப்படும் இங்கிலாந்தின் அன்டி மரே, செர்பியாவின் ஜோகோவிச் ஆகியோர் கால் இறுதி சுற்றுகளுடன் வெளியேறி உள்ளனர்.
கடும் சவால் கொடுக்கக்கூடிய ஸ்பெயினின் ரபேயல் நடால் நான்காவது சுற்றுடன் வெளியேறினார். இதனால் இறுதிப் போட்டிக்கு பெடரர் தகுதி பெறும் பட்சத்தில், அவரது கிராண்ட் ஸ்லாம் மகுடங்களில் மேலும் ஒரு வைரமாக விம்பிள்டன் கிண்ணம் இணையக் கூடும்.